சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த கைதி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனமுவந்து அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் பரவி வரும் இரண்டாவது அலை கொரோனா பரவல் பல உயிர்களை குடித்து வருகிறது. மரணம் மற்றும் இழப்புகள் கொடிய குற்றம் செய்தவர்களின் மனங்களையும் கரைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறைக் கைதி ஒருவர் சமீபத்தில் பெயில் கிடைத்து வெளியே வந்த நிலையில் மயானம் ஒன்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் பாபா எனும் அவர், 2009ம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் ஒன்றில் தண்டனை பெற்று சிறைவாசம் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் பிணையில் சிறையிலிருந்து ரிலீசாகி வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்த நிலையில் கொரோனாவால் தினந்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்ததை கண்ட ஷ்யாம் பாபா, இந்தூரில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள தார் மாவட்டத்தின் உள்ளூர் மயானம் ஒன்றில் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் உதவத் தொடங்கினார். கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள சில கடினமான வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என்ற நிலையில் தொற்று நோய் பரவும் அபாயத்தால் குடும்பத்தினரே இறுதிச் சடங்குகள் செய்ய தயங்கிய நிலையில் ஷ்யாம் பாபா தானே முன்வந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யத் தொடங்கினார்.
தற்போது மயானத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வரும் ஷ்யாம் பாபா, ஆம்புலன்ஸ்களில் இருந்து உடல்களை இறக்குவது, உடல்களை சிதையில் அடுக்கி வைப்பது, தேவைப்படும் நேரத்தில் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பெருந்தொற்று காலத்தில் ஷ்யாம் பாபாவின் அர்ப்பணிப்பை பார்த்த சிறை நிர்வாகத்தினர் அவருடைய விருப்பத்திற்கு இணங்க அவருடைய பிணைக் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.
கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான காலவரம்பை அதிகரிக்க பரிசீலனை - காரணம் என்ன?
இருப்பினும் இதுபோன்ற மரணங்களால் தான் கவலையடைந்துள்ளதாகவும், விரைவில் இந்த மரணங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஏற்பட்ட
கொரோனா பரவலின் போதும் ஷ்யாம் பாபா, சிறையில் இருந்து பரோலில் வெளிவந்து இது போன்று சமூக சேவையில் ஈடுபட்டதாக அவரை ஹெமேந்திர சிங் பன்வார் என்ற சமூக ஆர்வலர் பாராட்டியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.