திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்' என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இந்த திருமணம் வெறும் வேடிக்கை நிகழ்வாகவும், சாதாரண ஒரு நிகழ்வாகவும் இருப்பது உண்மையில் வருத்தத்திற்குரியது. திருமணம் என்பது இரு மனங்கள் இணைந்து ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை இடும் நிகழ்வு என்றும் சொல்லலாம். ஆனால் இவற்றை எல்லாம் பொய்யாக்கி மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபரின் சமீபத்திய செயல் அனைவரையும் கோபப்பட செய்துள்ளது.
26 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் (software engineer) ஒருவர் மத்திய பிரதேசத்தில் ஐந்து நாட்களில் இரண்டு பெண்களை திருமணம் செய்து பின்னர் தப்பிச் சென்றதாக போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சனிக்கிழமை அங்குள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தினர் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கண்ட்வாவில் உள்ள கோட்வாலி காவல் நிலைய (Khandwa's Kotwali police station inspector) இன்ஸ்பெக்டர் பி.எல். மாண்ட்லோய் (B L Mandloi) தெரிவித்தார்.
இந்தூரில் (Indore) உள்ள முசாகேடி (Musakhedi) பகுதியில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபர், கடந்த டிசம்பர் 2ம் தேதி காண்ட்வாவில் வசிக்கும் ஒரு பெண்ணையும், டிசம்பர் 7ம் தேதி இந்தூரில், மோவ் என்ற இடத்தில் வசிக்கும் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தூரின் மோவ் தாலுக்காவில் நடைபெற்ற திருமணத்திற்கு, முதலாவது திருமண பெண்ணின் உறவினர் ஒருவர் விருந்துக்குச் சென்று அந்த இரண்டாவது திருமணத்தை தனது செல்போனில் போட்டோ எடுத்து அதை முதலாவது திருமண வீட்டாருக்கு அனுப்பி வைத்தார்.
இங்கேதான் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் (FIR) ரிஜிஸ்டர் செய்யக் கோரி காண்ட்வா பெண்ணின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி, தனது பெண்ணின் திருமணத்திற்கு, மணமகனுக்கு தாங்கள் திருமணம் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக ரூ. 10 லட்சம் செலவிட்டதாக கூறினர். எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்றது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர், திருமணம் செய்த பின்னர் மணப்பெண்ணை, இந்தூரில் உள்ள தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு, தவிர்க்க முடியாத சில வேலைகளுக்காக அவர் போபாலுக்குச் செல்ல வேண்டும் என்று அந்த பெண்ணிடம் சொன்னதாகவும், அந்த நபர் வெளியூர் சென்ற பின்னர் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை என்றும் கூறினர். ஆனால், அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மோவ் என்ற இடத்திற்கு சென்றதாக ஒரு அதிகாரி கூறினார்.
டிசம்பர் 2ம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரி மற்றும் பிற உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்திருந்தார், என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது இரண்டாவது திருமணம் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் நடைபெறவில்லை என்றும், தனது முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட மணமகன் தெரிவித்திருந்தார். டிசம்பர் 7க்கு பிறகு, குற்றம்சாட்டப்பட்ட நபர் வீடு திரும்பவில்லை, அவரது மொபைலையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார் என்று மாண்ட்லோய் கூறினார்.
தப்பி ஓடிய அந்த குற்றவாளியை தாங்கள் வலைவீசி தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு சிலரின் இதுபோன்ற செயலால் ஏமாற்றிய நபர் மட்டுமல்லாது பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். சமூகத்தில் அவர்கள் கொண்டிருக்கும் நல்மதிப்பிற்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும். இதுபோன்ற ஒழுக்கம் குறைந்த செயல்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையே சிறந்த வழியாகும்.