மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஆக்சிஜன் வாங்க நன்கொடையளித்த விவசாயி!

மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஆக்சிஜன் வாங்க நன்கொடையளித்த விவசாயி!

மாவட்ட ஆட்சியரை சந்தித்த சம்பாலால் குர்லஜார், திருமண செலவுகள்போக மீதமிருந்த 2 லட்சம் ரூபாயை ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக நன்கொடையாக அளித்தார்.

  • Share this:
மத்தியப் பிரதேசத்தில் மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த 2 லட்சம் ரூபாயை, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க விவசாயி ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார்.

கடினமான காலங்களில் ஒரு சிலர் பலனை எதிர்பாராமல் செய்யும் சில செயல்களே மனிதநேயத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் தனது மகளின் திருமணத்துக்காக குறிப்பிட்ட தொகையை விவசாயி ஒருவர் சேர்த்து வைத்துள்ளார். மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்த அவர், கொரோனா காரணமாக செலவுகளை குறைத்து கடந்த வாரம் எளிமையாக நடத்தியுள்ளார். பின்னர், திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த தொகையில் மீதம் இருந்த 2 லட்சம் ரூபாய் தொகையை, ஆக்சிஜன் கிடைக்காமல் அல்லல்படும் மக்களுக்கு நன்கொடையாக கொடுக்க திட்டமிட்டு, மாவட்ட கலெக்டரிடமும் அந்த தொகையை வழங்கியுள்ளார்.

அவர் பெயர் சம்பாலால் குர்ஜார். விவசாயியான அவர் மத்தியப் பிரதேச மாநிலம் நீமூச் மாவட்டத்தில் குவால் தேவியான் கிராமத்தில் வசித்து வருகிறார். தனது செல்ல மகள் அனிதாவின் திருமணத்துக்காக பல ஆண்டுகளாக பணத்தை சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார். வெகு விமரிசையாக மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்பது அவரின் விருப்பம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டு, தேதியும் குறிக்கப்பட்டது. ஆனால், திடீரென நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியது.

குறிப்பாக, அவர் வசிக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் தொற்று கடுமையாக பரவத் தொடங்கியது. இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கோவில் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே வைத்து நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த வாரத்தில் தனது மகளின் திருமணத்தை மிக எளிமையாக நடத்திய சம்பாலால் குர்ஜார், செலவுகளையும் சிக்கனமாக செய்துள்ளார். தனது மகளின் திருமணத்தை திருப்தியாக நடத்தி முடிந்த மகிழ்ச்சியில் இருந்த அவர், திருமணத்துக்காக மீதமிருந்த தொகையை கொரோனா காலத்தில் அல்லல்பட்டு வரும் மக்களுக்காக செலவிட முடிவெடுத்தார்.

அதற்காக தனது மாவட்ட ஆட்சியரை சந்தித்த சம்பாலால் குர்லஜார், திருமண செலவுகள்போக மீதமிருந்த 2 லட்சம் ரூபாயை ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக நன்கொடையாக அளித்தார். மேலும், தான் வசிக்கும் தாலுகா பகுதியில் இருக்கும் மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு அந்த சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய குர்ஜார், மக்கள் அவதிப்படும் சூழலில் மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த மனம்வரவில்லை. அதனால், திருமணத்துக்கு சேர்த்து வைத்த தொகையில் செலவு செய்ததுபோக எஞ்சியிருந்த தொகையை கோவிட் வைரஸால் அவதிப்படும் மக்களுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கு அரசுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டேன் எனத் தெரிவித்தார். அவரின் இந்த மனிதநேயமிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Published by:Arun
First published: