ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை பாகுபலியாக உருவகப்படுத்தி பாஜக தயாரித்த வீடியோ, அக்கட்சிக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய பிரதேசத்தில் மந்திரவாதிகள், சினிமா காட்சிகள் என அனைத்து அஸ்திரங்களையும் பாஜக பிரயோகிக்கத் துவங்கியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கடந்த செப்டம்பரிலேயே ஒரு ஜாலியான தேர்தல் பிரசார வீடியோவை பாஜக ஆதரவாளர்கள் இணைய உலகில் உலவ விட்டனர்.
இந்தியாவின் மாபெரும் வெற்றிப்படமான பாகுபலி திரைப்படத்தின் காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் மாற்றி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை பாகுபலியாகவும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை, வில்லன் பல்லால தேவனாகவும் உருவகப்படுத்தியிருந்தனர். அத்துடன் சோனியா காந்தியை ரம்யாகிருஷ்ணனாக சித்தரித்து தவறான முடிவை அவர் எடுப்பவராகவும் அதில் கூறியிருந்தனர்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரான கமல்நாத், ஜோதிராதித்யாவின் வளர்ச்சியை பொறுக்காமல், கட்டப்பா போல் கூட இருந்தே முதுகில் குத்திக் கொல்பவராகவும் சித்தரித்துள்ளது. இந்த வீடியோ கடந்த மாதம் வெளியானாலும் தேர்தல் நெருக்கத்தில் இது மாநிலம் முழுவதும் வைரலாகி உள்ளது. பாகுபலி அளவுக்கு சிவ்ராஜ் சிங் சவுகான் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ இந்த வீடியோ மத்திய பிரதேசத்தை கலக்கி வருவதென்னவோ உண்மை.
சத்தீஸ்கரில், பாஜக மூன்று முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளதால் அதை வீழ்த்த காங்கிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் ராமன் சிங்கை வீழ்த்த துருப்புச்சீட்டு ஏதேனும் கிடைக்காதா என காங்கிரஸ் துழாவி வருகிறது. அதற்கு பலன் கிடைத்துள்ளது. மறைந்த பிரதமர் வாஜ்பாயின் சகோதரி மகளும், 32 ஆண்டு காலம் பாஜகவில் இருந்தவருமான கருணா சுக்லாவை ராமன் சிங் போட்டியிடும், ராஜ் நந்தன்கோன் தொகுதியில் காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்த கருணா, தன் பலமான பின்னணியால் வெற்றிக்கனியை பறிப்பாரா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தெலங்கானா மாநிலம் அவசர, அவசரமாக தேர்தலில் களமிறங்கியதால், அங்கு போதுமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. அதனால், தலைமைத் தேர்தல் ஆணையர், ஓ.பி. ராவத் தன் அதிகாரிகள் படையுடன் அங்கு இன்று முகாமிட்டுள்ளார்.
ஐந்து மாநில தேர்தலில் காங்கிரசுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ள மாநிலங்களில் முக்கியமானது, மிசோரம். எனினும், கடந்த சில நாட்களில் அக்கட்சியின் மூத்த தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். இது, முதல்வர் லால்தனாவ்லாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baahubali, Baahubali video, Bjp campaign, Cm Shivraj Chouhan, Madhya Pradesh Chief Minister