மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது, மேற்கு வங்க மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி, தற்போது தொழில்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
பார்த்தா சாட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவர் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் 100 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என புகார் எழுந்ததை அடுத்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது.
பள்ளி சேவை ஆணையம் (WBSSC) மற்றும் மேற்கு வங்க முதன்மைக் கல்வி வாரியம் (WBBPE) ஆகியவற்றில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் முறைகேடுகள் ஏற்பட்டதாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்பு அமைச்சருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் அமலாக்கத்துறையினர், அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவரும், முன்னாள் உதவியாளருமான அர்பிதா முகர்ஜி என்பவரது வீட்டில் 20 கோடி ரூபாய் மற்றும் 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
டோலிகஞ்சில் உள்ள டயமண்ட் சிட்டி வளாகத்தில் உள்ள முகர்ஜியின் சொகுசு பங்களாவில் நடத்தப்பட ரெய்டில் சிக்கிய ஒட்டுமொத்த பணத்தையும் கணக்கு பார்ப்பதற்காக அதிகாரிகள் ஓரிடத்தில் மலை போல் குவித்து வைத்துள்ளனர். அதில் 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் குவிந்து கிடக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. பண குவியலை பார்த்து மிரண்டு போன அமலாக்கத்துறையினர், வங்கி அதிகாரிகளின் உதவியுடன் கரன்சி எண்ணும் இயந்திரங்களை கொண்டு மொத்த பணத்தையும் கணக்கிட்டுள்ளனர்.
இவ்வளவு பணம் எப்படி வந்தது, எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது, அதற்கான உரிய ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து முகர்ஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடமும் இரவோடு, இரவாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Also Read : வாங்கா பாபாவின் இரண்டு கணிப்புகள் உண்மையாகிவிட்டன – இன்னும் என்ன நடக்கப் போகிறது.?
இந்நிலையில் அடுத்த நாள்(23 ஜூலை)காலை பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். முதல் நாள் இரவு முழுவதும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய போது, சாட்டர்ஜி தனக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவர்களை வீட்டிற்கு அழைத்து பரிசோதனை செய்துள்ளார். மருத்துவர்களும் அமலாக்கத்துறையினரிடம் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று காலை கைது பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.