சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயனை எதிர்க்கும் வாளையார் சிறுமிகளின் தாய்!

சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயனை எதிர்க்கும் வாளையார் சிறுமிகளின் தாய்!

பினராயி விஜயன்

மர்மமான முறையில் மரணமடைந்த வாளையார் சிறுமிகளின் தாய், மரணமடைந்த தனது மகள்களுக்கு நீதி கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

  • Last Updated :
  • Share this:
கேரளாவை புரட்டிப் போட்ட வாளையார் சிறுமிகளின் மர்ம மரணம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடிய விஷயம் கிடையாது. தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் அரங்கேறிய பின்னர், தமிழக கேரள எல்லையான வாளையாரில் பட்டியலினத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கையான 13 மற்றும் 9 வயது சிறுமிகள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். முதல் சிறுமி மரணமடைந்த 52 நாட்கள் கழித்து அவரின் தங்கையும் அதே போன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இருவருமே பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாகவும், இந்த பாதக செயலில் ஆளும் சிபிஎம் கட்சி பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

#Justice4WalayarSisters என்ற ஹேஷ்டேக் மூலம் சிறுமிகளின் மரணத்திற்கு நீதி கேட்டு சமூக வலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், கேரளாவிலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மாநில காவல்துறையினர் மீது குற்றம் சுமத்திய சிறுமிகளின் பெற்றோர் நீதிமன்றத்தில் போராட்டம் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாளையார் சிறுமிகளின் தாயார் தனது மகள்களின் மரணத்திற்கு நீதி கேட்டு மொட்டை அடித்தார், இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது கேரள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து தர்மடம் தொகுதியில் சிறுமிகளின் தாயார் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

தனது மகள்களின் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை ஆடைகளை சின்னமாக கேட்டுப் பெற்றுள்ளார்.

முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து போட்டியிடுவது குறித்து சிறுமிகளின் தாயார் கூறுகையில், “எனது மகள்களின் இறப்பிற்கு காரணமான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் இன்று அவர்கள் சுதந்திரமாக என் வீட்டை சுற்றி நடமாடுவதை பார்க்க முடிகிறது. ஊழல் செய்த அதிகாரிகள் நடவடிக்கைக்கு ஆளாகாமல் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசு சிபிஐக்கு உதவும் என கூறியது, ஆனால் தற்போது வரை வழக்கின் கோப்புகளை சிபிஐ வசம் அரசு ஒப்படைக்கவில்லை. இது தான் வாளையார் சிறுமிகளின் தாயாருக்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த வாக்குறுதியா?” என வீடியோவில் உருக்கமாக பேசியிருக்கிறார் சிறுமிகளின் தாயார். மேலும் எந்தக் கட்சியின் ஆதரவும் தனக்கு தேவையில்லை என்றும் அவர் முன்னர் கூறியிருந்தார்.

வாளையார் சிறுமிகளின் தாயார் தேர்தல் களத்தில் முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து களமிறங்குவது அம்மாநிலத்தில் பரபரப்பான விஷயமாக மாறியிருக்கிறது.
Published by:Arun
First published: