Home /News /national /

சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்கள்.. மியான்மர் எல்லையில் தமிழர் நகரம்..

சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்கள்.. மியான்மர் எல்லையில் தமிழர் நகரம்..

மோரே கிராமம்

மோரே கிராமம்

Tamils City Moreh : நாடு கடத்தப்பட்ட 12 தமிழ் குடும்பத்தினர் வந்த இடம், மணிப்பூர் மாநிலத்தின் எல்லை கிராமமான மோரே. இரவோடு இரவாக பர்மா எல்லைக்குள் நுழைந்த தமிழர்கள் அனைவரையும் இழுத்துச் சென்று கைது செய்தது பர்மா ராணுவம்...

  மணிப்பூரின் மோரே கிராமத்தைச் சேர்ந்த 2 தமிழர்கள் மியான்மரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோரே கிராமத்தில் தமிழர்கள் வாழத் தொடங்கியதன் வரலாறை புரட்டிப் பார்ப்போம்..

  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைக்கு ஏற்ப உலகம் எங்கும் வாழும் இனம் தமிழினம்... 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வாணிபம் செய்த தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து தொடங்கி பல நாடுகளில் கால் பதித்தார்கள் என்பது வரலாறு. தமிழர்கள் கால் பதித்து, வேர் விட்ட நாடுகள் பல இருந்தாலும், அதில் முக்கியமானது தற்போது மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா...

  சங்கத் தமிழனும், சோழர்களும் தடம் பதித்த பர்மாவுக்கு 1760களில் பிழைப்புத் தேடி சென்றார்கள் தமிழர்கள்.. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிழைப்புக்காக பர்மா சென்றவர்களில் ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.. குறிப்பாக, காரைக்குடியைச் சேர்ந்த வியாபாரிகள் பலர் பாத்திரங்கள், ஜவுளிகளை பர்மாவில் விற்பனை செய்து, தேக்கு மரங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டு வரப்பட்ட பர்மா தேக்குகளால் கட்டப்பட்டு, இன்றும் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன பல வீடுகள்.

  பிழைக்க இடம் தேடிச் சென்ற பர்மாவில் விவசாயம் மற்றும் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள் தமிழர்கள். அத்துடன், பர்மாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திலும் தங்களை இணைந்து கொண்டனர் பர்மா வாழ் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இல்லாத சிக்கல்கள், 1948 ஜனவரி 4ஆம் தேதி பர்மா விடுதலை பெற்ற பிறகு உருவானது தமிழர்களுக்கு. இனவெறி தாக்குதல் நடத்தி, தமிழர்களின் சொத்துகளை சூறையாடினார்கள் பர்மிய இளைஞர்கள்.. அதன் உச்சமாக, ராணுவப் புரட்சியால் 1962ல் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி நிவின், சிறுபான்மையின மக்களின் சொத்துகளை நாட்டுடமையாக்கினார்.  உழைத்து உருவாக்கிய கடைகள், வணிக நிறுவனங்களை, ராணுவ ஆட்சிக்கு தாரைவார்த்துவிட்டு தவித்தார்கள் தமிழர்கள்... அச்சுறுத்தல், கெடுபிடிகள் சுழன்றாடிய சூழலில், மூதாதையர்களின் தேசமாக தமிழ்நாட்டிற்கே திரும்ப நினைத்தார்கள் லட்சக்கணக்கான தமிழர்கள்.. அவர்கள், பர்மாவில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்ப இலவசமாக கப்பலை அனுப்பிவைத்தார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு...

  இந்தியா திரும்பிய பர்மிய தமிழர்களுக்கு, மறுவாழ்வு முகாம்களை அமைத்துக் கொடுத்தாலும், அது பலன் கொடுக்கவில்லை பலருக்கு. பர்மாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து பழகிய தமிழர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை தமிழ்நாட்டின் உணவு முறைகளும், வாழ்க்கை முறையும்...  வாழ்வாதாரத்திற்கும் வழியில்லாத சூழலில், மீண்டும் பர்மாவிற்கே செல்ல முடிவெடுத்தார்கள் பல நூறு குடும்பத்தினர். அதில் 12 குடும்பத்தினர் வந்த இடம், மணிப்பூர் மாநிலத்தின் எல்லை கிராமமான மோரே. இரவோடு இரவாக பர்மா எல்லைக்குள் நுழைந்த தமிழர்கள் அனைவரையும் இழுத்துச் சென்று கைது செய்தது பர்மா ராணுவம்.

  ஒரு மாத சித்திரவதைக்குப் பிறகு, இந்தியாவிற்கே நாடு கடத்தப்பட்டார்கள் அந்த 12 குடும்பத்தினரும்... அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட இடமும் மணிப்பூர் எல்லையான மோரே தான். பர்மாவின் உணவு முறைகள், வாழ்க்கை முறைகளோடு ஒத்துப் போன மோரேவிலேயே வசிக்கத் தொடங்கினார்கள் 12 தமிழ்க் குடும்பத்தினர். பர்மா எல்லைக்கு அருகே நிம்மதியாக அவர்கள் வாழ்ந்ததை அறிந்து அங்கு படையெடுத்தார்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்த மற்ற பர்மிய தமிழர்கள். ஒரு சில தமிழ் குடும்பங்கள் பர்மாவுக்குள் ரகசியமாக சென்று வாழத் தொடங்கி, தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். மற்றவர்கள் வழக்கம்போல கடும் உழைப்பு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு, மோரேவிலும் தங்களை நிலைநாட்டிக் கொண்டார்கள்.

  சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்கள்..


  சுமார் ஏழரை சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட மோரே நகரின் தற்போதைய மக்கள் தொகை 40 ஆயிரம். மோரேவின் பூர்வ குடிகளான குக்கிகளுடன், நேபாளிகள், பஞ்சாபிகள் என பலர் வசித்தாலும், அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழர்களே. ஆலமரம் தொடங்கி, அண்மையில் கட்டி எழுப்பப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வரை, தமிழர்களின் வழிபாடு மோரேவிலும் தொடர்கிறது.

  தைத்திங்கள் நாளில் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் மோரே தமிழர்கள், பர்மாவில் வசிக்கும் தங்களது சொந்தங்களையும் அவ்வபோது சந்திப்பது வழக்கமான ஒன்று. அவ்வாறு, பர்மாவுக்குள், அதாவது இன்றைய மியான்மருக்குள் நண்பர்களைப் பார்க்கச் சென்ற தமிழர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றுள்ளது அந்நாட்டு ராணுவம்.

  உளவாளிகள் என்ற அச்சத்தால், அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது மோரே தமிழ்ச் சங்கம். எல்லையில் அன்றாடம் படுகொலைகளை அரங்கேற்றி வரும் மியான்மர் ராணுவத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே பர்மியர்களுக்கு மட்டுமின்றி, தங்களுக்கும் நிம்மதி என்கிறார்கள் மோரே தமிழர்கள்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Myanmar

  அடுத்த செய்தி