பிகாரில் 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட கன
மழை வெள்ள பாதிப்பால் 33க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை மாலை தொடங்கி அங்கு வெளுத்து வாங்கி வரும்
புயல் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பலரது வீடுகள் சேதமடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான ஹெக்டோர் விளை நிலங்களும் நீரில் மூழ்கின.
மின்னல் மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டார். மேலும், வெள்ள பாதிப்பு குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, பயிர்கள் மற்றும் வீடுகள் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்த பேரிடர் பாதிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், 'பிகார் மாநிலத்தில் இடி மின்னல் மற்றும் கன மழை காரணமாக பல உயிரிழப்பு ஏற்பட்டது ஆழ்ந்த கவலையை தந்துள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவும் அவர்கள் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்கிக்கொள்ள இறைவன் பலத்தை தர வேண்டும். மாநில அரசின் வழி காட்டுதலின் படி உள்ளூர் நிர்வாகம் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகிறது' என்றார்.
இதையும் படிங்க:
சிவலிங்கம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த டெல்லி பேராசிரியர் கைது
அம்மாநிலத்தின் கத்தியார் பகுதி இதுபோன்ற மழை வெள்ளத்தில் முதல் முறை பாதிக்கப்பட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் துயரத்துடன் தெரிவித்துள்ளனர். புயலின் தாக்கம் காரணமாக பலரது வீட்டின் கூரைகள், மின்கம்பங்கள், மரங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.