2.6 கோடி ஹெக்டேர் தரிசு நிலத்தை, 2030ம் ஆண்டுக் குள் விவசாயத்துக்கு உகந்த நிலமாக மாற்றுவதற்கான திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர
மோடி உறுதியளித்துள்ளார்.
சர்வதேச சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈஷா யோகா அறக்கட்டளையின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், 27 நாடுகளுக்கு, 100 நாட்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பூமியைக் காப்போம் என்ற பெயரிலான இந்த இயக்கத்தின், 75வது நாளையொட்டி, டில்லி யில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார், அப்போது, “சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு வகைகளில் பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.துாய்மை இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, பெட்ரோலில் எத்தனால் சேர்ப்பது என, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது. மண்ணின் வளத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மண் வள அட்டைகள் வழங்குவதன் வாயிலாக, தங்கள் நிலத்தின் தன்மை குறித்து விவசாயிகள் அறிய வகை செய்யப்பட்டுள்ளது.மண்ணின் வளத்தை அதிகரிக்க உதவியும் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு நல்ல உற்பத்தியுடன், அதிக வருவாயும் கிடைக்கிறது.இதைத் தவிர, 2.6 கோடி ஹெக்டேர் தரிசு நிலத்தை, 2030ம் ஆண்டுக் குள் விவசாயத்துக்கு ஏற்றா நிலமாக மாற்றுவதற்கான திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
வளர்ந்த நாடுகள், சுற்றுச்சூழலை அதிகளவில் சுரண்டுகின்றன. ஆனால் காற்று மாசை தடுக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த நாடுகள் பெரிய அளவில் பங்களிப்பு அளிப்பதில்லை.பருவநிலை மாறுபாடு பிரச்னையில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவே. இருப்பினும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.சர்வதேச அளவில் ஒரு தனிநபர், ஒரு ஆண்டுக்கு வெளியிடும் கரியமில வாயுவின் அளவு 4,000 கிலோவாக உள்ளது.
இது நம் நாட்டில், அது 500 கிலோவாக உள்ளது.காற்று மாசைக் குறைக்கும் வகையில் பெட்ரோலில், 10 சதவீதம் எத்தனால் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. கடந்த, 2014ல், 1.5 சதவீதமாக இருந்தது, தற்போது, 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாகவே சாதிக்கப்பட்டுள்ளது. காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலப்பது 270 கோடி கிலோ குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நடவடிக்கைகளினால் விவசாயிகளின் வருவாய் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டு களில், புதிதாக 20 ஆயிரம் சதுர கி.மீ., வனப் பகுதி உருவாக்கப்பட்டுஉள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி, 18 சதவீதம் வளர்ந்துள்ளது” என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.