அணு ஆயுதம் பிரயோகம் தொடங்கி மத ரீதியான வெறுப்புணர்வை பரப்பி மக்களிடையே அச்சத்தை விதைத்து போலி செய்திகளை பரப்பியது என 102 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தையும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடகங்களில் ஒழுங்குமுறை ஏற்படுத்தி பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 2021, பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த சட்ட விதிகளின் கீழ் அத்துமீறி செயல்படும், யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள கணக்குகளை அரசு முடக்கி வருகிறது. அதன்படி, கடந்த வாரம் 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கிய நிலையில், மொத்தம் 102 யூடியூப் சேனல்களை இதுவரை அரசு முடக்கியுள்ளது.
இதற்கான காரணம் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: "விதிமுறைகளின் கீழ் முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் இந்தியாவைச் சேர்ந்த பார்வையாளர்களை குறிவைத்து போலி செய்திகளைத் திட்டமிட்டு பரப்பிவந்தன. குறிப்பாக மத ரீதியாக அவதூறு செய்திகளை பரப்ப நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இவை செயல்பட்டன.
உதாரணமாக, முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள், 'அஜ்மீர் தர்கா மீது ராணுவ தாக்குதல் நடைபெற்றது, ஒரு கோயில் மீது இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கொடியை பறக்கவிட்டனர், குதுப்பிமினார் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டது, வடகொரிய அதிபர் அயோத்திக்குத் தனது படையை அனுப்பினார்' என பல்வேறு போலி தகவல்களை உண்மையான செய்தி ஊடகங்கள் போல தங்களை கட்டமைத்து வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க: மருத்துவரை சரமாரியாக தாக்கிய முதலமைச்சர் மகள்.. வீடியோ வைரல்.. மிசோராமில் சம்பவம்
மேலும், இந்தியாவில் அணு ஆயுத வெடிவிபத்து நடந்துள்ளது, இந்தியா தனது அணு ஆயுதத்தைத் தொலைத்து விட்டது, இந்தியாவும் எகிப்தும் இணைந்து துருக்கி மீது படையெடுத்தது என இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் இந்த சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது போன்ற போலி செய்திகளை பரப்பி அதன் மூலம் கணிசமான வருவாயை இந்த சேனல்கள் ஈட்டியுள்ளன. இது போன்ற அத்துமீறல்களை மேற்கொள்ளும் சேனல்களை உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.