நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் 24 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளை, அக்னிபத் திட்டம், பெட்ரோலிய விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி தர திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூட உள்ளன. இந்தக் கூட்டத் தொடரில், தமிழ்நாடு மற்றும் சத்தீஷ்கரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. அதோடு, அச்சு மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, எரிசக்தி பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், அக்னிபத் திட்டம், எரிபொருள் விலைஉயர்வு, வேலைவாய்ப்பின்மை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய விவகாரங்களை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்தக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட வார்த்தைகளின் பட்டியலை நாடாளுமன்ற செயலகம் மாற்றியமைத்துள்ளது. இதில், சகுனி, பாலியல் வன்கொடுமை, கொரோனாவை பரப்புபவர், குழந்தைத்தனம், முதலைக் கண்ணீர், ஊழல், கழுதை, நாடகம் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், அதுகுறித்தும் பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த தடை விதித்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரல்ஹாத் ஜோஷி கேட்டுக் கொண்டார். இலங்கை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இதையும் படிங்க: மலிவான கட்டணத்தில் சுற்றுப்பயணம் - 13 நாட்களுக்கான டூர் பேக்கேஜை அறிவித்துள்ள IRCTC !
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இது நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிரானது இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, மாநிலங்களவை கட்சிகளின் தலைவர்களுடன் அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசனை நடத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parliament, Parliament Session