ஹோம் /நியூஸ் /இந்தியா /

கனமழையால் தத்தளிக்கும் கேரளா, கர்நாடகம், மராட்டியம்..

கனமழையால் தத்தளிக்கும் கேரளா, கர்நாடகம், மராட்டியம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேரளா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்ட்ராவில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடுமையான மழையால் சிக்கி தவித்து வரும் கேரளாவில் கண்ணூர், வயநாடு ஆகிய இடங்கள் மழை வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கியுள்ளன. இதுவரை கேரளாவில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை உள்ளூர் மீனவர்கள் படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 8 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.

கொச்சி விமான நிலையத்தில் நாளை பிற்பகலில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை காண ராகுல்காந்தி நாளை வயநாடு செல்கிறார்.

கேரளாவிலிருந்து பெங்களூரு செல்லும் முக்கிய சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பாலக்காடு மாவட்டம் அகலி என்ற இடத்தில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணி ஒருவரை மீட்பு குழுவினர் கயிறு கட்டி மீட்டனர்.

கர்நாடகத்தில் பெல்காம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். 80 தாலுக்காக்களைச் சேர்ந்த 1024 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பெல்காமில் நிர்மலா சீத்தாராமன் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். கர்நாடக மழையால் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மழை வெள்ளத்திற்கு முக்கிய புள்ளிகளும் தப்பவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன் பூஜாரியை தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து பேரிடர் மீட்புப் படையினர் படகில் மீட்டு கரை சேர்த்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் ஷிரோலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஷிங்க்லி என்ற இடத்தில் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினரும் ராணுவத்தினரும் கூட்டாக இணைந்து மக்களை படகுகள் மூலம் மீட்டனர்.

மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் தர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்ட்ராவில் 46 கிராமங்கள் தண்ணீர் மூழ்கியுள்ளன.

குஜராத்திலும் மிக அதிக கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுளளது.

மத்திய பிரதேச மாநிலம் பத்வானியில் கோவில்களில் தண்ணீர் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். குவாலியர் அருகே உள்ள ராஜ்கத் அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளது.10-க்கும் மேற்பட்ட அணைகளில் நிரம்பியுள்ளன.

ஒடிசாவில் ஹிரோகுட் அணையில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. நாளை ஒடிசாவில் 13 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த மாநிலத்தின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Published by:Yuvaraj V
First published:

Tags: Flood, Heavy rain