8 ஆண்டுகளில் ஒரு முறை கூட தன்னை பிரதமராக பார்த்தது இல்லை என பிரதமர்
மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்று திங்கள் கிழமையுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை முன்னிட்டு வரும் 14 - ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இமாச்சல பிரதேசம் சென்ற மோடி, ரிட்கியில் கரீப் கல்யாண் சம்மேளனம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த சுமார் 17 லட்சம் பயனாளிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 11வது தவணையாக 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா இரண்டாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் வகையில், 21 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தார்.
இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆட்சிக்கு வரும் முன் குடும்ப அரசியல், ஊழல் பற்றி பேச்சுகள் இருந்தன என்றும், தற்போது மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே ஒலிப்பதாக கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் பிரதமராக தன்னை ஒருமுறை கூட பார்த்ததில்லை என்றும், கோப்புகளில் கையெழுத்திடும் போது மட்டுமே பிரதமராக உணர்வதாகவும் கூறினார். தன் வாழ்க்கை முழுவதும் நாட்டு மக்களுக்காகவே என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டு மக்களின் நலனை பாஜக மட்டுமே சிந்திப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல் ஜூன் 2ல் பாஜகவில் இணைவதாக தகவல்!
கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது சிம்லாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சாலையில் நின்றுகொண்டு மோடியின் தாயாரான ஹீராபென்னின் ஓவியத்தை காட்டினார். திடீரென்று காரை நிறுத்தி இறங்கிய மோடி அந்தப் பெண் அளித்த அவரது தாயாரின் ஓவியத்தை மோடி பெற்றுக்கொண்டார். அந்த ஓவியத்தை வரைய, எத்தனை நாட்கள் ஆனது எனவும் வினவினார். மோடியின் தாயாரான ஹீராபெனின் ஓவியத்தை ஒரே நாளில் முடித்துவிட்டதாக அப்பெண் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.