• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடி - ராஜபக்ச சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்ட முக்கிய பிரச்னைகள்

பிரதமர் மோடி - ராஜபக்ச சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்ட முக்கிய பிரச்னைகள்

மஹிந்த ராஜபக்ச - நரேந்திர மோடி

மஹிந்த ராஜபக்ச - நரேந்திர மோடி

  • Share this:
    தமிழர்களின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்போம் என்றும் கூறியுள்ளார்.

     

    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த மகிந்த, இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார். பின்னர் குடியரசுத்தலைவர் மாளிகை வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சவுக்கு அரசு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற மகிந்த ராஜபக்ச, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ஆகியோர் சந்தித்து பேசினர்.

    இதைதொடர்ந்து இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது இந்தியா இலங்கையின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி என தெரிவித்த மகிந்த ராஜபக்ச, பிரதமராக பதவியேற்ற பின் முதல் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

     

    இலங்கை தமிழர்கள் பிரச்னைகள் குறித்து திறந்த மனதுடன் விரிவாக விவாதித்ததாகவும்,  தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதி, நீதி, சம உரிமை மற்றும் மரியாதை வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு புரிந்து கொண்டு நிறைவேற்றும் என தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

    ஆசிய பிராந்தியத்தில் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இருநாடுகளும் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியுடன் போரிடும் என்றும் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை இந்தியா அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். வர்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்ததாகவும், இருநாட்டு மக்கள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சுற்றுலா மேம்பாடு குறித்து விவாதித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: