அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்க குஜராத் மாநிலம் கோலாகலமாக தயாராகி வருகிறது. தன்னை வரவேற்க 70 லட்சம் பேர் வருவார்கள் என பிரதமர் மோடி உறுதியளித்ததாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் ட்ரம்ப்பை வரவேற்க 1 முதல் 2 லட்சம் பேர் மட்டுமே வருவார்கள் என அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நேஹ்ரா கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் ட்ரம்ப் திறந்து வைக்கவுள்ள கிரிக்கெட் மைதானம், இப்போதே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குஜராத் காவல்துறையின் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ட்ரம்ப்பை வரவேற்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பேட்டி அடங்கிய வீடியோவை வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் உடன் இந்தியா வரும் மனைவி மெலானியா ட்ரம்ப், டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிக்கூடம் ஒன்றை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ட்ரம்ப் உடன் இந்தியா வரும் முக்கிய பிரதிநிதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணக்குழுவில் ட்ரம்பின் மருமகனும், இவாங்காவின் கணவருமான ஜேரட் குஷ்னர் முக்கிய இடம் பிடிக்கிறார். மேலும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், வர்த்தகத்துறை செயலாளர் வில்பர் ரோஸ், அமெரிக்க கரூவூல செயலாளர் ஸ்டீபன் நுசின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன், ஆகியோர் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் எரிசக்தி, பிராந்திய பிரச்னைகள், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் பயணத்தின் போது எந்த வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்ற போதும், இருநாடுகள் இடையிலான நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இருதலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.