குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ ஆணையம், காஷ்மீர்! சாத்தியமானது எப்படி? மோடி விளக்கம்

தேசியக் கல்விக் கொள்கையின் முதல் வரைவு அறிக்கைக்கு கிடைத்த ஏராளமான பரிந்துரைகள் மூலம் லட்சக்கணக்கான உள்ளீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ ஆணையம், காஷ்மீர்! சாத்தியமானது எப்படி? மோடி விளக்கம்
மோடி
  • News18
  • Last Updated: August 14, 2019, 4:26 PM IST
  • Share this:
தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவக் கல்வியில் வெளிப்படைத் தன்மை, பொறுப்பு, தரம் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று இன்றுடன் 75 நாள்கள் ஆகிறது. இந்த 75 நாள்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்துக்கு பிரதமர் மோடி விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் தேசியக் கல்விக் கொள்கை, தேசிய மருத்துவ ஆணையம், ஊழல் பிரச்னைகள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.

மோடி 2.0 வின் 75 நாள்கள் ஆட்சி:


அந்தப் பேட்டியில் அவர், ‘முதற்கட்ட சிறிது நாள்களிலேயே எங்களுடைய அரசு, இதுவரையில் இல்லாத அளவுக்கான வேகத்துடன் செயல்படுகிறோம். நாங்கள் என்ன செய்து முடித்தாலும், அதனுடைய முடிவு நல்ல எண்ணமும், தெளிவான திட்டமும் கொண்டதாக இருக்கும். எங்களுடைய அரசின் வெறும் இந்த 75 நாள்களில் ஏராளமான விஷயங்கள் நடைபெற்றுள்ளன. குழந்தைகள் பாதுகாப்பு முதல் சந்திரயான் -2 வரை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் முதல் முத்தலாக் என்ற கொடுமையிலிருந்து இஸ்லாமியப் பெண்களுக்கு விடுதலை அளித்தது வரை, காஷ்மீர் முதல் விவசாயிகள் வரை, மக்களுடைய வலிமையான ஆணையுடன் இணைந்து வலிமையான அரசால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துள்ளோம்.

நம்முடைய காலத்தில் முக்கிய பிரச்னைகளாக உள்ளவற்றை நாங்கள் முதலில் கவனத்தில் எடுத்து கையாண்டுவருகிறோம். ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் தண்ணீர் வழங்கலை அதிகப்படுத்தவும், தண்ணீர் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. , கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வலிமையான கட்டமைப்பின் காரணமாகவே, கடந்த 75 நாள்களில் எங்களால் இத்தனை விஷயங்களைச் சாதிக்க முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீரமைப்புகள்தான், தற்போது நாடு வேகமாக புறப்படுவதை உறுதிப்படுத்துகிறது.

17-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரலாற்று சாதனை படைத்த ஒன்று. 1952-ம் ஆண்டிலிருந்து கணக்கில் கொள்ளும்போது, இந்தத் தொடர்தான் மிக அதிக மசோதாக்களை நிறைவேற்றிய ஒரு கூட்டத்தொடர். இது ஒன்றும் சாதாரண சாதனையல்ல. விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், மருத்துவத்துறையில் சீரமைப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் மிக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அந்த விஷயத்தில் என்ன சாரம்சம் என்றால் எப்போது உங்களுடைய நோக்கம் சரியாக இருக்கிறதோ அங்கு, அதனுடைய காரணமும், செயல்படுத்தும் முறையும் தெளிவாக இருக்கும். அங்கே மக்கள் ஆதரவு இருக்கும். அப்போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு இலக்குகள் கிடையாது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் நோக்கங்கள்:

2014-ம் ஆண்டு, நாங்கள் எப்போது அரசு அமைத்தோமோ, அப்போது அமலில் இருந்த மருதுவத்துறை கல்வி மீது நிறைய கவலைகள் இருந்தன. நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகளை மேற்பார்வையிடுவது குறித்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது ஊழலின் கூடாரமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, நாங்கள் தீவிரமான ஆய்வு மேற்கொண்டோம். அதில், தவறான நிர்வாகம், வெளிப்படைத் தன்மையில், ஒரு தலைப் பட்சமாக இருப்பதை வெளிப்படுத்தியது. தேசிய மருத்துவ ஆணையம் என்பது மிகவும் தொலைநோக்குடைய சீர்திருத்தம். அது முக்கியமான பிரச்னைகளை சரிசெய்யும். அதில், பல்வேறு சீர்திருத்தங்கள் உள்ளடங்கியுள்ளது. அது, ஊழல் கூடாரங்களை அழிக்கும். வெளிப்படைத் தன்மையை அதிகப்படுத்தும்.

இந்த நேரம், உலகத்தில் அடுத்த கட்ட வளர்ச்சியை அளிக்கும் சக்தியாக தேசங்கள் இந்தியாவைப் பார்க்கின்றன. ஆரோக்கியமான மக்கள் இருந்தால் மட்டும் மட்டுமே இது சாத்தியம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஏழை மக்களை ஏழ்மையிலிருந்து வெளியே கொண்டு வர அவர்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பது முக்கியமானது. தேசிய மருத்துவ ஆணையம் இந்த நோக்கத்திலும் சிறப்பாக செயல்படும். இந்த நாட்டின் மருத்துவக் கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் தரத்தை இது உறுதிப்படுத்தும். மாணவர்களுக்கான தடைகளை குறைப்பது, மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிப்பது, மருத்துவக் கல்வியின் செலவினங்களைக் குறைப்பது தேசிய மருத்துவ ஆணையத்தின் நோக்கம்.

அதன் மூலம், ஏராளமான திறமையான இளைஞர்கள் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுப்பார்கள். அது, மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். ஆயுஸ்மான் பாரத் திட்டம் சுகாதாரநலத்துறையில் புரட்சியைக் கொண்டுவரும். இது ஆரோக்கியமான உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். மூன்று மாவட்டங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் செயல்பட்டுவருகிறோம்.

சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க, வருமானத்தை அதிகரிக்க நமக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தேவை. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில். தேசிய மருத்துவ ஆணையம் இந்தப் பிரச்னைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளும். 24 புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுவதன் மூலம் 2019-2020-ம் கல்வியாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலான மருத்துவ இடங்கள் உருவாக்கப்படுகின்றன. வெளிப்படையான, எளிதில் அணுகத்தக்க, மலிவான மருத்துவக் கல்வியின் மூலம் சிறந்த சுகாதாரத்தை உருவாக்குவதற்கான நம்முடைய பாதை தெளிவாக உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கைக்கான காரணம்:

கல்வி என்பது வெறுமனே கடிமானது மட்டுமல்ல. அதில், முக்கியமான கூறு என்பது தொழில்நுட்பம் சார்ந்த, அனைவரையும் உள்ளடக்கூடிய, மக்களை மையமாகக் கொண்ட, மக்கள் வளர்ச்சி மாதிரிக்கான அறிவார்ந்த மனித வளத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கவேண்டும். திறமையை நேர்மறையான வாழ்க்கைக்கு மாற்றக் கூடியதாக மட்டும் இருக்கக் கூடாது. நாட்டின் எதிர்காலத்தை தாங்கி நிற்கக் கூடியதாக இருக்கவேண்டும். கல்வியின் எல்லா அம்சங்களுக்கும் நாங்கள் பணியாற்றிவருகிறோம்.

பள்ளிக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் குறித்து கற்றுகொடுப்பதற்காக நாங்கள் முயற்சி செய்கிறோம். உயர்கல்வித்துறையில், தொடர்ச்சியாக கல்வி இடங்களை அதிகரிப்பது, நாடு முழுவதும் தரமான கல்வி நிலையங்களை அதிகரிப்பது, கல்வி நிலையங்களுக்கு தன்னாட்சியை அதிகரிப்பது ஆய்வு படிப்புகளை ஊக்குவிப்பது முதலியவற்றில் கவனம் செலுத்துகிறோம். உயர்கல்விக்கான நிதி நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம். அதன்மூலம், 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளோம்.

இதுவரையில், 21,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 52 பல்கலைக்கழகங்கள் சேர்த்து மொத்தம் 60 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள் யூஜிசியின் வரம்புக்குள் இருக்கும். ஆனால், புதிய படிப்புகள், திறன் வளர்ப்பு படிப்புகள், ஆய்வுப் பூங்கா ஆகியவை அமைப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர்களுக்கு வெளிநாட்டு ஆசிரியர்களை நியமிக்க, வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கான உரிமை உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் முதல் வரைவு அறிக்கைக்கு கிடைத்த ஏராளமான பரிந்துரைகள் மூலம் லட்சக்கணக்கான உள்ளீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு தற்போது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகள் பலமுறை கேட்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கல்வியலாளர்களாலும் நிபுணர்களாலும் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்.

சமூகத்தை அரிக்கும் ஊழலுக்கு எதிராகப் போர்:

சுதந்திர இந்தியாவின் தொடக்கத்திலிருந்து, ஊழல் நம்மை பற்றிக் கொண்டு பின்னே இழுத்துள்ளது. கட்டாயத்தின் காரணமாகவோ, வேலையை உடனே முடிப்பதற்காகவோ, பேராசைக்காகவோ மக்கள் ஊழலை கையிலெடுக்கின்றனர். ஆனால், அவர்கள் கூட ஊழலை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஊழலுக்கு எதிராக யார் முதலில் போராடப் போகிறோர்கள் எங்கிருந்து தொடங்கப் போகிறார்கள் என்பதுதான் எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி.

ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு மக்கள், ஊடகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பு ஆதரவும் இருக்கும். ஏனென்றால், இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு அது தடையாக உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டும் கிடையாது. அரசு அலுவலகத்தில் இருந்தாலும், மார்கெட்டில் இருந்தாலும் ஊழல் சமூகத்தின் நம்பகத்தன்மையை அரித்துள்ளது. ஒருவர் காவல்நிலையத்துக்கு செல்லும்போது தனக்கு நீதி கிடைத்துவிடுமா என்று யோசிக்கிறார். அதேபோல, மார்கெட்டிலிருந்து ஏதோ ஒன்று வாங்கினால், அந்தப் பொருள் நல்லப் பொருளா என்று யோசிக்கிறார்.

ஊழலை அச்சுறுத்த நாங்கள் முதல் நாளிலேயே முடிவு செய்துவிட்டோம். அரசியல் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், யாரேனும், எங்கேயாவது ஊழல் செய்ய நினைத்தால் நாங்கள் இதை செய்ய முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு நாங்கள் வெற்றியடைகிறோம் என்பதைக் காட்டுகிறது. ஊழல் மட்டும் குறையவில்லை. நம்முடைய சமூகத்தின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கிறது. வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்