பிரதமர் நரேந்திர
மோடியை வேண்டுமானால் மக்கள் நீக்க முடியும் ஆனால்
பாஜகவை இன்னும் பல ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்கிறார் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.
பாஜகவுடன் நாம் இன்னும் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியிருக்கும். கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காகப் பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.
மேலும் ராகுல் காந்தியை விமர்சித்த பிரசாந்த் கிஷோர், பிரதமராக இருக்கும் மோடியின் அதிகாரம் குறையக்குறைய பாஜகவும் மெல்ல சரியும் என்று ராகுல் காந்தி மாயையில் இருக்கிறார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
“பாஜக வென்றாலும் சரி தோற்றாலும் சரி இந்திய அரசியலின் மையமாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு முதல் 40 ஆண்டுகள் எப்படியோ பாஜகவுக்கும் அப்படித்தான். பாஜக எங்கும் சென்று விடாது. அனைத்திந்திய அளவில் 30% வாக்குகள் பெற்ற கட்சி அவ்வளவு சுலபத்தில் மறைந்து விடாது.
ஆகவே மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள், அதனால் மோடியை தூக்கி எறிவார்கள் என்ற பொறியில் சிக்கி விடாதீர்கள். மோடியை வேண்டுமானால் மக்கள் நிராகரிக்கலாம், ஆனால் பாஜக எங்கும் சென்றுவிடவில்லை. அடுத்த பல பத்தாண்டுகளுக்கு பாஜகவுடன் நாம் போராடித்தான் ஆக வேண்டும்.
இங்குதான் ராகுல் காந்தியிடம் சிக்கல் உள்ளது. மோடியை மக்கள் தூக்கி எறிந்துவிட்டால் பாஜக தானாக அழியும் என்று நினைக்கிறார், அது நடக்காது. மோடியின் பலம் என்ன என்பதை ஆராய்ந்து புரிந்து கொண்டாலே தவிர அவரை வீழ்த்த ஒரு போட்டியாளரை கண்டுப்பிடிக்க முடியாது. பிரச்சனை என்னவெனில் மோடியின் பலம் என்னவென்பதை பலரும் ஆராய நேரம் செலவிடுவதில்லை.
அவரைத் தொடர்ந்து புகழ்ச்சியில் வைத்திருப்பது என்பதை கண்டுப்பிடிக்க வேண்டும். இது தெரிந்தால்தான் அவருக்கு எதிரானவரை கண்டுப்பிடிக்க முடியும். காங்கிரஸ் கட்சியில் யாரிடம் பேசினாலும், இன்னும் கொஞ்ச காலம்தான் மோடி தூக்கி எறியப்படுவார் என்றே நினைக்கின்றனர். ஆனால் அது நடக்கப்போவதில்லை என்று தான் நான் ஐயமுறுகிறேன். ஏனெனில் பெரிய அளவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்கின்றன, அதிருப்திகள் இருக்கின்றன, ஆனால் அதனால் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படவில்லையே.
தேர்தல் அளவில் பார்த்தால் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தான் பாஜகவுக்கு வோட்டளிக்கின்றனர், அல்லது ஆதரிக்கின்றனர். மீதமிருக்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாக்களிக்க 10, 12, 15 அரசியல் கட்சிகள் இருக்கின்றனவே. இதற்குக் காரணம் காங்கிரஸின் வீழ்ச்சியே. காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு குறைந்து வருகிறது. 65% வாக்குகள் உடைந்து பிரிந்து விட்டன” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றார் பிரசாந்த் கிஷோர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.