ஹோம் /நியூஸ் /இந்தியா /

நீட் தேர்வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் கேரள முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

நீட் தேர்வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் கேரள முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

கேரள மாநில முதலமைச்சர் பினராஜி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழங்கப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ‘நீட்’ தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்திட, மத்திய அரசை வலியுறுத்தி வேண்டும் என கேரள முதலமைச்சர் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான குழு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கியது.

  கேரள மாநில முதலமைச்சர் பினராஜி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்த திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., அவர்கள் இன்று (6.10.2021), காலை நேரில் சந்தித்து கடிதத்தையும், ‘நீட்’ தேர்வு குறித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் அளித்த பரிந்துரைகளையும் இணைத்து, வழங்கினார். அதுபோது, தென்காசி தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

  சில தினங்களுக்கு முன்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், மேற்குவங்காளம், ஒடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, கோவா, பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதினார்.

  அதில், கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்ட முதலமைச்சர், அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்குமாறு அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது என்பதை தெரிவித்திருந்தார்.

  நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் "தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021" என்ற சட்டமுன்வடிவினை நிறைவேற்றியுள்ளதாகவும், அந்தச் சட்டமுன்வடிவின் நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

  நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டதுடன், முதலமைச்சர் இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டுமென்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்தார்.

  Must Read : நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகுமா? அடுத்தவாரம் அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசனை

  மேலும், தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து, கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதல் அமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும், இந்த முக்கியமான பிரச்சனையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: MK Stalin, Neet Exam, Pinarayi vijayan