குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் இன்று பிரமாண்டப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ள நிலையில், இந்த பேரணிக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. இந்நிலையில், திமுகவின் பேரணிக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று நடத்த உள்ள பேரணிக்கு எதிராக வாராகி என்பவரும், ஆவடியைச் சேர்ந்த எழிலரசு என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், முறையான அனுமதியின்றி பேரணி நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும், ஏற்கனவே மாணவர்கள் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ள நிலையில், தற்போது பேரணி நடத்த அனுமதிக்க கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை புரிந்து கொள்ளாமல் இந்த பேரணியை நடத்த இருப்பதாகவும், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது போல, தமிழகத்தில் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இதை நேற்றிரவு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அவசர வழக்காக விசாரித்தனர். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் விசாரணை தொடங்கியதும், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரணி தொடர்பாக கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் திமுக சார்பில் உத்தரவாதம் அளிக்காததால், அனுமதி மறுக்கப்பட்டதாக வாதிட்டார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பின் அனுமதி மறுக்கப்பட்டதா? அல்லது முன்பே கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், முன்பே நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜனநாயக நாட்டில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், ஒருவேளை காவல் துறையின் நிபந்தனைகளை திமுக ஏற்றால் அனுமதி வழங்குவதில் என்ன பிரச்னை என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், விதிமுறைகளை பின்பற்றுவதாக புதிய விண்ணப்பம் கொடுத்தால் பரிசீலிக்கப்படுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, காவல்துறை உத்தரவை மீறி பேரணி நடத்தினால் டிரோன் மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஜனநாயகத்தில் போராட்டங்களை தடுக்க முடியாது என்ற போதும், காவல் துறையின் கேள்விகளுக்கு அரசியல் கட்சி பதிலளிக்காதது அபாயகரமானது எனவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் 8 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பேரணிக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்திருப்பது தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டார்.
மேலும், எப்படியாவது இந்த பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும் என திட்டமிட்டு ஆளுங்கட்சியினர் சிலரைப் பயன்படுத்தி நீதிமன்றத்தை நாடியதாகவும் குற்றஞ்சாட்டினார்.