பெண் சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாத ஒரே சட்டசபையாக மிசோரம் சட்டசபை அமைகிறது.
மிசோரம் மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸை படுதோல்வி அடையச் செய்து மாநிலக் கட்சியான மிசோ தேசிய முன்னணிக் கட்சி வெற்றி பெற்றது.
தற்போது அமையவுள்ள புதிய சட்டசபையில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லாதது தான் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்ட 15 பெண் வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். மொத்தமாக மிசோரம் மாநிலத்தில் போட்டியிட்ட 209 வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். ஆனால், அந்த மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இந்தத் தேர்தலில் தான் அதிக பெண் வேட்பாளர்கள் இருந்தார்களாம்.
மிசோரத்தில் மொத்தம் 7,07,395 வாக்காளர்கள். இதில் 6,20,332 மட்டுமே சமீபத்தில் நடந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இவர்களில் 3,20,401 பெண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதும் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள சமூகமாகவே மிசோரம் உள்ளது. பல முக்கியக் கட்சிகளும் கூட மிசோரத்தில் பெண்களை அரசியலில் வேட்பாளர்களாகக் களம் இறக்குவதை மறுக்கிறார்கள். இதுவே பெண்கள் இல்லா சட்டமன்றம் அமைவதற்கான காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 26 தொகுதிகளை வென்று மக்களின் கட்சியாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் மிசோ தேசிய முன்னணிக் கட்சியும் ஒரு பெண் வேட்பாளர்களைக் கூட தன்னுடைய கட்சியின் சார்பாக முன் நிறுத்தவில்லை. இதுபோலவே உள்மாநிலக் கட்சிகள் பலவும் ஒரு பெண் வேட்பாளரைக் கூட தேர்தலில் நிறுத்தவில்லை. நிறுத்தப்பட்ட 15 பெண் வேட்பாளர்களும் கூட பெரிதாக சோபிக்கவில்லை. இதற்கு அம்மாநிலத்தில் உள்ள ஆணாதிக்க சிந்தனையே காரணம் என்றும் பெரிதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதில், தேர்தலில் போட்டியிட்ட 15 பெண்களும் சேர்ந்து வாங்கிய மொத்த ஓட்டுகள், 14,428 மட்டுமே. பெண்களை நிறுத்தினால் ஓட்டு விழாத சமூகத்தில் ஒரு பெண்ணை முன்னிறுத்த கட்சிகள் எப்படி முன்வருவர் என கட்சிகளும் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கின்றனர். மதுவிலக்கு அறிவிக்காத ஒரு கட்சியை மாநிலத்தைவிட்டே தூக்கி எறிந்த அதே சமூகம் தான் பெண்களை அரசியலில் முன்னிறுத்துவதை விரும்பாத ஒரு சமூகமாகவும் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது.
மேலும் பார்க்க: நடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mizoram