மேற்குவங்கத்தில் மத்திய அமைச்சர் வாகனம் மீது திரிணாமுல் காங். தொண்டர்கள் தாக்குதல் என புகார் - அதிர்ச்சி வீடியோ!

தாக்குதல் காட்சி - வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது

மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் பயணம் செய்த கார் மற்றும் அவரது வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற கான்வாய் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்களை மத்திய அமைச்சர் முரளிதரன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
மத்திய அமைச்சர் வி.முரளிதரன் பயணம் செய்த வாகனம் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 2ம் தேதி வெளியானது. இதில் 200க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் மீண்டும் மேற்குவங்கத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான மறு நாளே பாஜக அலுவலகம் ஒன்று சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுடைய வீடு, கடை, சொத்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுவருவதாகவும், வெறித்தனமான தாக்குதல் நடைபெற்றுவருவதாகவும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வைரலானது.

இந்நிலையில் மேற்குவங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் பயணம் செய்த கார் மற்றும் அவரது வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற கான்வாய் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்களை மத்திய அமைச்சர் முரளிதரன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

2 நாள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ள முரளிதரன், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கான்வாய் வாகனங்களுடன் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கையில் கட்டைகள், இரும்பி கம்பிகளுடன் முரளிதரனின் வாகனத்தை வழிமறிக்கும் கும்பல் ஒன்று காரின் பின்பக்க கண்ணாடியை கட்டையால் அடித்து உடைக்கிறது.

“திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் எனது வாகன கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, எனது சகாக்கள் காயமடைந்துள்ளனர். என்னுடைய பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜகவுக்கு வாக்களித்ததற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள்: அசாமில் அகதிகளாக தஞ்சம் புகுந்த மேற்குவங்கத்தினர்!


மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வன்முறை கட்டவிழ்துவிடப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து 4 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஒன்றை உள்துறை அமைச்சகம் அமைத்து மேற்குவங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: