டிஜிட்டல் இணைய உலகில் பயணித்துவரும் நாம், 4ஜி, 5ஜி என்று புதுப் புதுப் தொழில்நுட்பத்தில் பயணித்து வந்தாலும் போன் பேசுவதற்கு கூட சிக்னல் கிடைக்கப்பெறாத பல பகுதிகள் தற்போதும் இருந்துவருகின்றன. இந்தியாவின் பல கிராமங்கள் மிகக் குறைவான சிக்னல் மட்டும் கிடைக்கும் நிலையில் உள்ளன. அப்படி ஒரு பகுதியில் மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேந்திர சிங் மாட்டிக்கொண்டார். போன் பேசுவதற்கு சிக்னல் கிடைப்பதற்காக அவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் பிரடாப்கர் மாவட்டத்திலுள்ள அம்கோ கிராமத்துக்கு அரசு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார் அமைச்சர் பிரஜேந்திர சிங். அப்போது, அவருடைய செல்போனில் டவர் கிடைக்கவில்லை. அதனால், 50 அடி உயரமுள்ள ராட்டினத்தில் ஏறி பேசியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதுகுறித்து தெரிவித்த அமைச்சர் பிரஜேந்திர சிங், ‘அந்த ஊர் மக்கள், ஊர் பிரச்னைகள் குறித்து என்னிடம் எடுத்துரைத்தார்கள்.
அதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுவதற்காக அவர்களைத் தொடர்பு கொண்டேன். என்னுடைய செல்போனில் டவர் இல்லை. அதனால், செல்போன் டவர் கிடைப்பதற்காக உயரத்தில் ஏறினேன். நான் அந்த கிராமத்தில் 9 நாள்களாக இருக்கிறேன்’என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்