கேரளாவில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் இல்லையா? மத்திய அமைச்சர் ட்வீட்டால் குழப்பம்

கேரளாவில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் இல்லையா? மத்திய அமைச்சர் ட்வீட்டால் குழப்பம்

'Metro Man' ஸ்ரீதரன்

கேரளாவில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை கட்சி தேர்ந்தெடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ.க பெரும் செல்வாக்கு பெறாத மாநிலங்கள். எனவே, இந்த ஐந்து மாநிலங்களிலும் காலை வலுவாக ஊன்ற பா.ஜ.க கடும் முயற்சி செய்துவருகிறது. இந்தநிலையில், இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் செயலாக்கத்தில் பெரும் பங்காற்றியதால் ‘மெட்ரோ மேன்’ என செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீதரன் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி பாஜகவில் இணைந்தார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கரம் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாஜவில் இணைந்தார். எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீதரன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், கேரளா மாநில பா.ஜ.க முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான முரளிதரன் அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கேரள பா.ஜ.க, ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கும். நாம், சி.பி.எம்மையும், காங்கிரஸையும் தோற்கடிப்போம்’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து, முரளிதரன் முதல்வர் வேட்பாளர் என்று செய்திகள் வெளியானது.

இந்தநிலையில், முரளிதரன், ‘ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளர் என்று கட்சி எந்த அறிவிப்பையும் வெளியிவில்லை. ஊடகங்கள் வாயிலாக கட்சி ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது என்று தெரிந்துகொண்டேன். அதனையடுத்து, தற்போதைய தலைவர் சுரேந்திரனிடம் கேட்கும் போது கட்சி அப்படி ஏதும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்’ என்று விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: