இந்தியாவின் 'Metro Man' ஸ்ரீதரன் பாஜகவில் இணைகிறார்!

இந்தியாவின் 'Metro Man' ஸ்ரீதரன் பாஜகவில் இணைகிறார்!

'Metro Man' ஸ்ரீதரன்

பாஜகவில் இணையும் தகவலை சிஎன்என் - நியூஸ்18 தொலைக்காட்சிக்கு உறுதிப்படுத்தியுள்ளார் ஸ்ரீதரன். கட்சி விரும்பினால் எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் 88 வயதாகும் ஸ்ரீதரன்.

  • Share this:
இந்தியாவின் ‘மெட்ரோ மனிதர்’ என அழைக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீதரன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீதரன் களமிறக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இந்திய ரயில்வே துறையின் சிறந்த பொறியியல் ஆளுமைகளில் ஒருவரான ஸ்ரீதரன் கேரள பாஜகவில் இணைய இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 21ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறவிருக்கும் ‘விஜய யாத்திரை’-யின் போது ஸ்ரீதரன் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தென் இந்தியாவில் அழுத்தமாக கால் பதிக்கும் முனைப்பில் விஜய யாத்திரையை பாஜக மேற்கொள்ள இருக்கிறது. இது பிப்ரவரி 21ம் தேதி காசர்கோட்டில் தொடங்கி மார்ச் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் நிறைவடைகிறது.

இதனிடையே, பாஜகவில் இணையும் தகவலை சிஎன்என் - நியூஸ்18 தொலைக்காட்சிக்கு உறுதிப்படுத்தியுள்ளார் ஸ்ரீதரன். கட்சி விரும்பினால் எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் 88 வயதாகும் ஸ்ரீதரன்.

'Metro Man' ஸ்ரீதரன்


பாஜகவில் இணைவது குறித்து ஸ்ரீதரன் கூறுகையில், “நான் 10 ஆண்டுகளாக கேரளாவில் வசித்து வருகிறேன். இங்கு இதுவரை ஆட்சியில் இருந்து இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி சரியான முறையில் ஆட்சி புரியவில்லை, மாநில வளர்ச்சிக்காக இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. தொழில்மயமாக்கல் மற்றும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அடிப்படையில் நிறைய விஷயங்கள் சாத்தியமாகும்.

கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. பாஜக வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது என்றார். பாஜகவில் இணைவது என்பது திடீர் முடிவு அல்ல என்றும் அவர் கூரினார்.

இந்தியாவின் ‘மெட்ரோ மனிதர்’:

இந்திய ரயில்வே துறையில் பல தசாப்தங்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஸ்ரீதரன் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரிதலா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கோழிக்கோடு அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக பணியை தொடங்கிய ஸ்ரீதரன், பின்னர் 1954ம் ஆண்டில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

1963ல் ஏற்பட்ட புயலில் சேதமடைந்த பாம்பன் பாலத்தை புணரமைக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த 6 மாத காலகட்டத்திற்குள் பணிகளை நிறைவு செய்து, மூன்றே மாதங்களில் அதனை முடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.. இந்திய ரயில்வேயின் அடையாளமாக விளங்கும் கொங்கன் ரயில்வே பாதையை தலைமையேற்று நிர்மானித்தவர்.

இந்தியாவின் முதல் மெட்ரோ என்ற பெருமை கொண்ட கொல்கத்தா மெட்ரோவை உருவாக்கியவர், டெல்லி மெட்ரோ இவரின் தலைமையில் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாக இயக்குனராக 1997 முதல் இருந்து பின்னர் 16 ஆண்டுகாலம் பணிபுரிந்து 2011ல் பணி ஓய்வு பெற்றார்.

லக்னோ, கொச்சி, ஜெய்ப்பூர், விசாகபட்டிணம், விஜயவாடா, கோவை மெட்ரோ நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். இவரின் தலைமையில் லக்னோ மெட்ரோ 2 ஆண்டுகள் 9 மாதங்களில் நிறைவடைய உள்ளது, இதுவே மிக குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட மெட்ரோவாக இந்திய அளவிலும் உலக அளவிலும் இருக்கப் போகிறது,

பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டு ஸ்ரீதரன் கவுரவப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: