ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை...! வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை...! வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

News18

News18

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    புதிதாக அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    வெளிநாட்டுக்குச் செல்ல மற்றும் அடையாள ஆவணமாக இருக்கும் பாஸ்போர்ட், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் துறையினால் வழங்கப்படுகிறது. சமீபத்தில், கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில், தாமரை சின்னம் இருந்துள்ளது.

    பாஸ்போர்ட்டின் இரண்டாவது பக்கத்தின் கீழே மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்து இடம் பெற்றிருக்கும். புதிய பாஸ்போர்ட்டுகளில் அதிகாரியின் கையெழுத்து இருக்கும் இடத்தில், ஒரு செவ்வக கட்டத்தின் உள்ளே தாமரை சின்னம் இருக்கிறது.

    மத்தியில் ஆளும் பாஜகவின் சின்னம் தாமரை என்பதால், இந்த விவகாரம் சர்ச்சையானது. இது பற்றி விளக்கம் அளித்த தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, பாதுகாப்பு காரணமாகவும், போலி பாஸ்போர்ட்டுக்களை கண்டறியவும் தற்போது பாஸ்போர்ட்டில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் பக்கத்தில் ஒரு செவ்வக கட்டத்தின் உள்ளே தாமரை மலரின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை முன் பக்கத்தில் இருந்தும் பார்க்கமுடியும். அத்துடன், ஆங்கிலத்தில் அதே இடத்தில் இந்தியா என்னும் வார்த்தையும் உள்ளது.

    இது மட்டுமின்றி இன்னும் 10 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை குறித்து வெளிப்படையாக கூறக் கூடாது. இந்த பாதுகாப்பு அம்சங்கள் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் கண்டறியப்படும். இந்தியாவின் தேசிய மலர் தாமரை ஆகும். எனவே இந்தியா என்னும் வார்த்தையுடன் தாமரை இடம் பெற்றுள்ளது. இதைச் சர்ச்சைக்கு உள்ளாக்கத் தேவை இல்லை” என்று கூறினார்.

    இந்த நிலையில், மக்களவையில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ராகவன் இதுபற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

    “பாதுகாப்பு காரணங்களுக்காகவே தாமரை அச்சடிக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் தாமரை முத்திரை பொறிக்கப்படும்” என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    Published by:Sankar
    First published:

    Tags: Passport