போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்த வந்தேன்: விவசாயிகள்தான் என்னை பேசவைத்தனர் - மாற்றி மாற்றி பேசும் கைது செய்யப்பட்ட நபரால் குழப்பம்

போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்த வந்தேன்: விவசாயிகள்தான் என்னை பேசவைத்தனர் - மாற்றி மாற்றி பேசும் கைது செய்யப்பட்ட நபரால் குழப்பம்

விவசாயிகள் போராட்டத்தில் நுழைந்த மர்ம நபர்

டெல்லியில் விவசாய சங்கத் தலைவர்களை கொலை செய்ய வந்ததாக கூறியதால் கைது செய்யப்பட்ட இளைஞர், விவசாயிகள் தம்மை மிரட்டி பொய் கூற சொன்னதாக முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் 60 நாள்களைக் கடந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி மற்றும் அதன் எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு போராட்டக்களத்தில் வெள்ளிக்கிழமை முகமூடியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை விவசாயிகள் சுற்றிவளைத்தனர். அவரிடம் விசாரித்த போது, விவசாய சங்கத்தை சேர்ந்த நான்கு தலைவர்களை கொலை செய்ய வந்துள்ளதாக கூறியதாக தெரிகிறது.

  பிடிபட்ட இளைஞரை செய்தியாளர்கள் மத்தியில் விவசாயிகள் பேச வைத்தனர். அப்போது, ஜனவரி 26ம் தேதி நடைபெறும் டிராக்டர் பேரணியில் போலீசார் போல் உடையணிந்து, தம்முடன் வந்தவர்கள் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், காவல் அதிகாரி ஒருவரே தம்மிடம் இதை செய்யக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

  இதையடுத்து அந்த இளைஞரை ஹரியானா மாநிலம் சோனிபட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பது தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், யோகேஷ் முரண்பட்ட கருத்தை தெரிவித்தார்.

  விவசாயிகள் தம்மை மிரட்டியதுடன் தாக்கியதாகவும், வற்புறுத்தி மது அருந்த வைத்து செய்தியாளர்கள் முன்பு பொய் பேச வைத்தனர் என்றும் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  இதற்கிடையே, வேளாண் சட்டங்களை கண்டித்து உத்தரகாண்ட் மாநிலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். டேராடூனில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ம் தேதி விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள சூழலில், காவல்துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: