நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில் ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே முகக்கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் மீண்டும் தீவிரமாக நடைமுறைப் படுத்து வருகின்றன.
அந்த வகையில் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்காமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய பிரதேச காவல்துறை விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் காவலர்கள் இருவர். அப்போது அந்த வழியாக கிருஷ்ணா கெயர் என்ற 35 வயது மதிக்கத்தக்க ஆட்டோ ஓட்டுநர் தனது மகனுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அவர் தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அவசரமாக சென்றுகொண்டிருந்தார், அப்போது அவர் அணிந்திருந்த முகக் கவசம் மூக்கில் இருந்து வழுக்கி சிறிது கீழிறங்கியுள்ளது. இதனை கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் தான் மருத்துவமனைக்கு அவசரமாக சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்து காவல்நிலையம் வர மறுக்கவே அவரை காவலர்கள் இருவரும் அடிக்கத் தொடங்கினர்.
According to NDTV report, "The mask of an auto rickshaw driver, had slipped down his nose on his way to hospital to meet his ailing father. Policemen caught him on the road & demanded him to come to station. When he refused, they started beating him up"pic.twitter.com/FaJQqCdXXL
சாலையில் அவரை கீழே தள்ளி இருவரும் சரமாரியாக அடித்ததை அங்கிருந்தவர்கள் சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தனது தந்தையை காவலர்கள் அடிப்பதை பார்த்த அவருடைய மகன் தந்தையை அடிப்பதை நிறுத்துமாறு காவலர்களிடம் மன்றாடியுள்ளார், உதவிக்காக அழைத்தும் யாரும் அருகில் வரவில்லை. அவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் கமல் பிரஜாபத் மற்றும் தர்மேந்திரா ஜாட் ஆகிய இருவரையும் உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.
சாலையில் பயணிக்கும் சாமானிய மக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொண்டதை பார்த்த வலைத்தள வாசிகள் சமூக வலைத்தளங்களில் போலீசாரை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.