சட்டீஸ்கர் : சிஆர்பிஎஃப் வீரரை விடுவித்த மாவோயிஸ்ட்கள்!

சட்டீஸ்கர் : சிஆர்பிஎஃப் வீரரை விடுவித்த மாவோயிஸ்ட்கள்!

ராகேஷ்வர் சிங்

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கும், மத்திய துணை ராணுவப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பிணையக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரரை மாவோயிஸ்ட்கள் விடுதலை செய்துள்ளனர்..

 • Share this:
  சட்டீஸ்கர் மாநிலம் பிஜாபூரில் கடந்த சனிக்கிழமையன்று மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மத்திய துணை ராணுவப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் பயங்கர தாக்குதலை நிகழ்த்தினர். இதில் 22 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், 30 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் தங்கள் தரப்பில் 4 பேரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்ததாக மாவோயிஸ்ட்கள் தெரிவித்தனர். மேலும் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தங்கள் வசம் இருப்பதாக கூறிய அவர்கள், ராகேஷ்வர் சிங் என்னும் அந்த வீரர் தங்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.

  இதையடுத்து ராகேஷ்வர் சிங்கை மீட்கும் நடவடிக்கையில் இறங்கிய அரசு மாவோயிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை நியமித்தது. மாதா ருக்மணி சேவா சன்ஸ்தான் அமைப்பின் தலைவரான தரம்பால் சைனி, பழங்குடியினத் தலைவர் டேலாம் பௌரய்யா ஆகியோர் மாவோயிஸ்ட் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து ராகேஷ்வர் சிங்கை விடுவிக்க மாவோயிஸ்ட்கள் ஒப்புக் கொண்டனர்.

  ஐந்து நாட்கள் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ராகேஷ்வர் சிங்கை வியாழனன்று மாவோயிஸ்ட்கள் விடுதலை செய்தனர். கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் பசனகுடா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ராகேஷ்வர் சிங், பேச்சுவார்த்தை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

  இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராகேஷ்வர் சிங், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: