Home /News /national /

டெல்லியில் கர்ப்பிணிப் பெண் உட்பட மாணவர்கள் பலர் மீது ஊபா வழக்கு - உச்ச நீதிமன்ற தலையீட்டைக் கோரும் மனித உரிமை அமைப்புகள்

டெல்லியில் கர்ப்பிணிப் பெண் உட்பட மாணவர்கள் பலர் மீது ஊபா வழக்கு - உச்ச நீதிமன்ற தலையீட்டைக் கோரும் மனித உரிமை அமைப்புகள்

ஆனந்த் டெல்டும்டே, ஷர்ஜீல் இமாம், சஃபூரா ஸர்கார் (இடமிருந்து வலமாக)

ஆனந்த் டெல்டும்டே, ஷர்ஜீல் இமாம், சஃபூரா ஸர்கார் (இடமிருந்து வலமாக)

இந்த மாதம் மட்டும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மஸ்ரத் ஜஹ்ரா, கவுஹார் கீலானி ஆகிய இரு பத்திரிகையாளர்கள் மீதும் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, உமர் காலித் ஆகியோர் மீதும் இந்தச் சட்டம் பதிவாகியுள்ளது.

  டெல்லியில் கர்ப்பிணிப் பெண் உட்பட மாணவர்கள் பலர் மீது ஊபா (UAPA) வழக்கு பதிவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தலையிட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

  ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவியும் மூன்று மாத கர்ப்பிணியுமான சஃபூரா ஸர்கார் (27) கடந்த ஏப்ரல் 10 அன்று டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் மீது ஊபா (UAPA) எனும் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி வன்முறையில் அவருக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  திகார் சிறையில் உள்ள சஃபூரா அவரது கணவரையோ வழக்கறிஞரையோ சந்திக்க ஏப்ரல் 14ல் இருந்து அனுமதிக்கப்படவில்லை என்று அம்னஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. அரசை விமர்சிப்பவர்களை துன்புறுத்துவதற்கும் சிறைவைப்பதற்கும் ஒரு கருவியாக இந்த ஊபா சட்டம் பயன்படுத்துவதாகவும், பிணை வழங்குவது, விரைவாக விசாரணை நடத்துவது, மனித உரிமைகளைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட எல்லா விதிமுறைக்கு அப்பாற்பட்ட கறுப்புச் சட்டம் இது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

  அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் அவினேஷ் குமார், கொரோனா நோய்த்தொற்று பரவும் காலத்தில் ஒரு கர்ப்பிணியாகவும் பெண்ணாகவும் உள்ள அவரை நெரிசல் மிகுந்த திகார் சிறையில் வைப்பதைக் கண்டித்துள்ளார்.

  மாணவி சஃபூராவோடு ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திலுள்ள ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவில் (JCC) செயல்பட்ட மீரான் ஹைதர் எனும் மாணவரும், அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களுக்கான சங்கத்தின் தலைவரான சிஃபாவுர்-ரஹ்மான் என்பவரும் இதேபோல ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்கள்.

  இந்த மாதம் மட்டும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மஸ்ரத் ஜஹ்ரா, கவுஹார் கீலானி ஆகிய இரு பத்திரிகையாளர்கள் மீதும் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, உமர் காலித் ஆகியோர் மீதும் இந்தச் சட்டம் பதிவாகியுள்ளது.

  இதுதவிர, கடந்த ஜனவரி மாதம் தேச துரோகச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது ஏப்ரல் 29 அன்று ஊபா சட்டம் போடப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் அகில் கோகாய் எனும் சமூகச் செயல்பாட்டாளர் மீதும் இச்சட்டத்தை அம்மாநில காவல்துறை போட்டிருக்கிறது.

  பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ’சன்விதான் சுரக்‌ஷா அந்தோலன்’ எனும் கூட்டமைப்பின் மூலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனுவில், நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்தக் கைது நடவடிக்கைகளில் தலையிட வேண்டும் எனக் கோரியுள்ளனர். அத்தோடு, டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய கபில் மிஷ்ரா போன்றோர் வெளியில் இருப்பதாகவும் ஜாமியா மில்லியாவில் மாணவர்களைத் தாக்கிய எந்த காவல்துறையினர் மீதும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see:


  Published by:Rizwan
  First published:

  Tags: Delhi, Human rights activist, UAPA

  அடுத்த செய்தி