திரிபுரா மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுள்ளார். தலைநகர் அகர்தலாவில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் எஸ்என் ஆர்யா இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக நேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிப்லப் தேப், இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். மத்திய அமைச்சர் பிரதிமா போமிக் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மாணிக் சாஹாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி கொள்கையின் படி திரிபுரா மக்களின் வளர்ச்சிக்காக உழைக்க போவதாக முதலமைச்சர் பொறுப்பேற்ற பின் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். அத்துடன், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கவனம் கொண்டு அதை மேம்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை துறையில் பட்டப்படிப்பு முடித்தவர் சாஹா. முன்னதாக காங்கிரஸ் உறுப்பினராக இருந்த சாஹா, 2016ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். 2020ஆம் ஆண்டு பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற சாஹா, திரிபுரா மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். 2021 நவம்பர் மாதம் திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் சாஹா. இதில் கணக்கில் வைத்தே சாஹாவுக்கு முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
துணை முதலமைச்சர் ஜிஷ்னு தேவ் வர்மா, அமைச்சர் ராம் பிரசாத் பால் ஆகியோர் நேற்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற கட்சி கூட்டத்தில் மாணிக் சாஹாவை முதலமைச்சராக தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் நாற்காலிகள் உடைக்கப்பட்டு சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாணிக் சாஹாவே முதலமைச்சாரக தேர்வாகினார். எதிர்ப்பு தெரிவித்த துணை முதலமைச்சர் ஜிஷ்னு தேவ்வும், அமைச்சர் ராம் பிரசாத்தும் பின்னர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:
கட்சியைப் பலப்படுத்த முழுவீச்சில் இறங்கும் ராகுல் காந்தி - மக்களைச் சந்திக்க நாடுதழுவிய பாதயாத்திரை
அதேவேளை, எதிர்க்கட்சியான சிபிஎம் இந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்தது. பாசிச வன்முறை பாதையில் மாநிலத்தை பாஜக ஆட்சி செய்வதாக சிபிஎம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.