காட்டில் வேட்டைக்காக சென்ற 7 நண்பர்கள்: அரங்கேறிய விபரீதம் - 4 பேர் பலி!

வேட்டை

உத்தரகண்ட் மாநிலத்தில் வேட்டையாடுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற 7 நண்பர்களில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்தும், 3 பேர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
உத்தரகண்ட் மாநிலத்தில் வேட்டையாடுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற 7 நண்பர்களில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்தும், 3 பேர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நண்பர்கள் 7 பேர் சேர்ந்து காட்டுப்பகுதிக்கு வேட்டைக்காக சென்ற இடத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவரும், 3 பேர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். நண்பர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதுடையவர்கள். ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்தும், மூவர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழக்க என்ன காரணம்?

உத்தரகண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்தில் பிலங்கனா ஒன்றியத்தில் உள்ளது குண்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 7 நண்பர்கள் காட்டுக் கோழிகளை வேட்டையாடுவதற்காக தங்களின் கிராமத்தை ஒட்டியுள்ள சோழா டோக் எனும் காட்டுப்பகுதிக்கு செல்ல முடிவெடுத்தனர். இதன்படி கடந்த சனிக்கிழமையன்று நண்பர்கள் 7 பேரும் ஒரு வேட்டை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அந்த காட்டுக்குள் சென்றுள்ளனர்.

ஒவ்வொருவராக வரிசையாக அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்த போது நண்பர்களில் ஒருவரான ராஜீவ் சிங் (வயது 22) நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அவர் தனது தோளில் துப்பாக்கியை மாட்டியிருந்ததால் துப்பாக்கியில் உள்ள இழுவிசையில் தவறுதலாக பட்டதில் அருகில் இருந்த மற்றொரு நண்பரான சந்தோஷ் பன்வார் (வயது 19) மீது துப்பாக்கு குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும் நண்பர்கள் அனைவரும் இதனால் அதிர்ச்சியில் உறைந்தனர். தான் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வந்ததில் தான் நண்பர் சந்தோஷ் உயிரிழந்தார் என்ற பயத்தில் அங்கிருந்து ராஜீவ் சிங் தப்பியோடினார்.

வேட்டை


மற்ற நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உயிரிழந்த சந்தோஷ்ன் உடலை தூக்கிக் கொண்டு தங்களது கிராமத்திற்கு வந்துள்ளனர். பின்னர் சந்தோஷின் உயிரிழப்புக்கு தாங்கள் தான் காரணம் என்ற மன அழுத்தத்தினாலும், குற்ற உணர்வினாலும் இருந்த நண்பர்கள் அர்ஜூன் சிங் (வயது 23), பன்கஜ் சிங் (வயது 24) , சோபன் சிங் (வயது 23) ஆகிய மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்தனர்.

உடனடியாக மூவரையும் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற போது மூவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நண்பர்கள் எடுத்துச் சென்ற துப்பாக்கிக்கான உரிமம் இருந்ததா என தெரியவில்லை. தப்பியோடிய ராஜீவ் சிங் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குண்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Arun
First published: