மியூசிக் பிளேயரில் சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டு நபரை அருகாமையில் வசித்து வந்த நபர் ஒருவர் படுகொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருகருகே வசித்து வரும் நபர்களுக்கிடையே பல்வேறு விவகாரங்களால் அவ்வப்போது உரசல் ஏற்படுவது இயல்பே. தண்ணீர் பிடிப்பது, வாகன பார்க்கிங், விருந்தினர்கள் வருகை, காதல் விவகாரம் என இப்படி பல்வேறு காரணங்களால் பிரச்னைகள் எழுவதுண்டு. அனால் சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்த நபரை அண்டை வீட்டுக்காரர் படுகொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் மல்வானி பகுதியில் உள்ள அம்புஜ்வாடி எனும் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேந்திர குமார் குன்னார், சயீஃப் அலி சந்த் அலி சேக். இவர்கள் இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த புதன் கிழமையன்று இரவு சுரேந்திர குமார் குன்னார் (வயது 40) தனது வீட்டின் பால்கனியில் மியூசிக் பிளேயரை வைத்து, அதில் பாடல்களை வால்யூம் அதிகமாக வைத்து சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தார். அண்டை வீட்டுக்காரரான 25 வயதாகும் சஃயீப் அலி, குன்னார் வீட்டுக்கு வந்து வால்யூமை குறைத்து பாடல்களை கேட்குமாறு கூறியிருக்கிறார்.
Also read:
கையில் குழந்தை வைத்திருந்த நபர் மீது போலீசார் கடும் தாக்குதல் - குழந்தையையும் பறிக்க முயன்றதால் பரபரப்பு
ஆனால், இதனை மறுத்த குன்னார் பாடல்களை அதிக சத்தத்துடன் கேட்டு வந்திருக்கிறார். இதனால் கடுப்பான சஃயீப் அலி குன்னாரை பலமாக தாக்கி தரையில் மோதச் செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த குன்னாருக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்திருக்கிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் சஃயீப் அலியை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாடல்களை சத்தமாக கேட்ட விவகாரம் கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.