கல்லுாரி மாணவன் போல ஃபேஸ்புக்கில் நாடகமாடிய இளைஞர் கார்த்திக், பல பெண்களை ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோக்களை சேகரித்து பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சென்னை கூவத்தூர் காரங்குப்பத்தை சேர்ந்தவர் 25 வயதான கார்த்திக்; ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் சமையல் வேலை செய்து கொண்டு ஆடு மாடுகளையும் மேய்த்து வருகிறார். இவருக்கும் புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு, புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
ஒருகட்டத்தில் மாணவியிடம் திருமண ஆசை காட்டிய கார்த்திக், மாணவியின் அந்தரங்க வீடியோக்களை அனுப்பும்படி கேட்டு வாங்கியுள்ளார். பின்னர் தனது படிப்பு செலவுக்கு வேண்டும் எனக் கூறி, 5,000 ரூபாய் வாங்கிய கார்த்திக், மேலும் 10,000 ரூபாய் கேட்டுள்ளார். மாணவி தர மறுக்கவே, அவரது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்ட கார்த்திக் 50,000 ரூபாய் தரவில்லை என்றால், மகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர் முகநூல் கணக்கு, செல்போன் எண்ணை வைத்து சென்னை கூவத்தூரில் இருந்த கார்த்திக்கை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் இது போல் பல பெண்களை கார்த்திக் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதான என விசாரித்து வருகின்றனர்.