மோடி, தேர்தல் ஆணையம் தப்பமுடியாது: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு

மோடி, தேர்தல் ஆணையம் தப்பமுடியாது: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு

மம்தா பானர்ஜி

சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டில் இருந்து தேர்தல் ஆணையம் தப்பிக்க இயலாது என்ற சென்னை உயர் நீதிமன்ற கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், ‘தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்குத் தேர்தல் ஆணையம்தான் காரணம். அந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது. தேர்தல் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாக” நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

  சென்னை நீதிமன்றத்தின் இந்த கருத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, “சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை நான் வரவேற்கிறேன். தன்னுடைய பொறுப்புகளில் இருந்து தேர்தல் ஆணையம் தப்பிக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேர்தல் ஆணையம்தான் மாநிலத்தில் கொரோனா பரவலுக்கு காரணம். கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தங்கியுள்ள 2 லட்சம் மத்திய படை வீரர்களை வாபஸ் பெறுங்கள். இதில் 75 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்குப் பாதுகாப்பான இடம் வழங்குங்கள். கடைசிக் கட்டத் தேர்தலில் மத்தியப் படைகளை தயவுசெய்து வாபஸ் பெறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: