பாஜகவுக்கு இனி நல்லகாலம் இல்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க.-வுக்கு எதிராக தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டம், கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மாநில அரசுகள் மேற்கொண்ட பணிகளுக்குரிய வெற்றியை மத்திய அரசு தனதாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். அரசியல் சாசனம், சட்டம் என அனைத்தையும் மாற்றும் மோடி அரசு மாற வேண்டிய நேரமிது என குறிப்பிட்ட மம்தா, வேலைகளே இல்லாதபோது, 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி என்ன பயன் என்றார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தலைவர் எவரும் இல்லை என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மம்தா, தங்களது மெகா கூட்டணியில் அனைவருமே தலைவர்கள்தான் என்றார். சிபிஐ, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி என அனைத்து நிறுவனங்களையும் மோடி அரசு சிறுமைப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டிய மம்தா, பாஜகவுக்கு வாக்களித்தால் மக்களின் பணம் திரும்ப கிடைக்காது என்றார். மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்ட நிலையில், பாஜகவுக்கு இனி நல்லகாலம் இல்லை என்றும் மம்தா குறிப்பிட்டார்.
Also Watch:
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.