மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்: கட்சி தாவிய எம்.எல்.ஏவுக்கு முக்கிய பதவி.. அதிருப்தியடைந்த பாஜகவினர்!

முகுல் ராய், மம்தா பானர்ஜி,

பாஜகவினருக்கு முக்கிய பதவியை அளிக்காதது முதல்வர் மம்தா பானர்ஜியின் தந்திர நடவடிக்கை என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.

  • Share this:
மேற்குவங்க அரசியலானது திரிணாமுல் காங்கிரஸ் Vs பாஜக என்ற நிலையை எட்டியிருக்கும் நிலையில் இவ்விரு கட்சியினரிடையே பல்வேறு விவகாரங்களில் உரசல் ஏற்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய பலரும் பாஜகவில் இணைந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு காட்சிகள் இடமாறியது. தற்போது பாஜகவில் இணைந்த திரிணாமுல் தலைவர்கள் மீண்டும் பழையபடி தாய்க்கட்சியிலேயே இணைந்து வருகின்றனர். இவர்களில் மிக முக்கியமானவராக திகழ்பவர் முகுல் ராய். பாஜகவின் தேசிய துணைத் தலைவராக இருந்த முகுல் ராய், சுவேந்து அதிகாரிக்கு பாஜகவில் கிடைத்துவரும் முக்கியத்துவத்தால் அதிருப்தியடைந்து பாஜகவில் இருந்து வெளியேறி சமீபத்தில் தான் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிலையில் மேற்குவங்க சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று (ஜூலை 9) முகுல் ராயை, பொதுக் கணக்கு கமிட்டியின் (PAC) தலைவராக அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் நியமித்துள்ளார்.

பொதுக் கணக்கு கமிட்டியின் தலைவர் பதவியானது வழக்கமான எதிர்கட்சிகளைச் சேர்ந்தவருக்கே கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வழக்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் உடைத்திருக்கிறது. பாஜக எம்.எல்.ஏக்கள் அசோக் லஹிரியை இக்கமிட்டியின் தலைவராக்க ஒருமனதாக பரிந்துரைத்த நிலையில், முகுல் ராய்க்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Also Read:   தொடர்ந்து மொபைல் பயன்படுத்துபவரா? உங்கள் கண்களை பாதுகாக்கும் இந்த செயலி பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

இந்த விவகாரம் குறித்து பேசிய எதிர்கட்சித் தலைவரான பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, “எதிர்கட்சிக்கு இந்த பதவி அளிக்காதது வரலாற்றில் இதுவே முதல் முறை. நிதி முறைகேட்டை மறைக்க சபாநாயகர் இதை வேண்டுமென்றே செய்திருக்கிறார். பாஜகவின் அசோக் லஹிரிக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்” என்றார்.

முகுல் ராய் வடக்கு கிருஷ்ணா நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸுக்கு கட்சி தாவிய போதும் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இன்னமும் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரை சந்தித்து ஏற்கனவே பாஜகவினர் புகார் அளித்திருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து ஜூலை 16ம் தேதி விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

Also Read:   25 கிலோவில் உலகின் மிகப்பெரிய லாலிபாப் தயாரித்து அசத்திய யூடியூபர் - வைரலாகும் வீடியோ!

அதே நேரத்தில் சபாநாயகரின் முடிவை நியாயப்படுத்தி பேசிய திரிணாமுல் காங்கிரஸின் சவுகதா ராய் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவரை பொது கணக்கு கமிட்டியின் தலைவராக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அது ஒரு வழக்கம் மட்டுமே. தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரே அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே இருக்கிறது. அவர் சரியானதைச் செய்துள்ளார்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாஜகவினருக்கு முக்கிய பதவியை அளிக்காதது முதல்வர் மம்தா பானர்ஜியின் தந்திர நடவடிக்கை என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: