முகப்பு /செய்தி /இந்தியா / பாஜக - காங்கிரஸ் கள்ளஉறவு.. 2024 தேர்தலில் தனித்துப்போட்டி.. மம்தா பானர்ஜி அதிரடி!

பாஜக - காங்கிரஸ் கள்ளஉறவு.. 2024 தேர்தலில் தனித்துப்போட்டி.. மம்தா பானர்ஜி அதிரடி!

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

காங்கிரசுக்கும் இடது சாரிகளுக்கும் வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் என்பதால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களோடு தான் கூட்டணி என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • West Bengal, India

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு அம்மாநில அரசில் அமைச்சராக பதவி வகித்த சுப்ரதா சஹா கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தோபாஷிஸ் பானர்ஜியும், இடதுசாரிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் போரான் பிஸ்வாசும், பாஜக சார்பில் திலிப் சஹாவும் போட்டியிட்டனர்.

அந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் போரான் பிஸ்வாஸ் முன்னிலையில் இருந்தார். இறுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தோபாஷிஸ் பானர்ஜியை விட 22,980 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் போரான் பிஸ்வாஸ் வெற்றி பெற்றார். பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த தோல்வி திரிணாமூல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சாகர்டிகி தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தான் வெற்றி பெற்று வந்தது. அதிலும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சாகர்டிகி தொகுதியில் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு சாகர்டிகி தொகுதியை திரிணாமூல் காங்கிரஸ் இழந்துள்ளது.

இந்த தோல்வியால் மிகவும் அதிர்ச்சியடைந்த மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், பாஜக தனது வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்றம் செய்துள்ளதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும், பாஜகவின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி இனிமேல் தன்னை பாஜகவிற்கு எதிரான கட்சி என சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மம்தா, பாஜகவோடு காங்கிரசும், இடதுசாரிகளும் கள்ள உறவு வைத்துள்ளதால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்து தனித்தே போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்றார். மேலும், பாஜகவை எதிர்க்கும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே சமயம் இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாகவும், மக்கள் ஆதரவுடன் தங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்றும், ஜனநாயக சக்திகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எளிதில் வீழ்த்த முடியும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மேற்குவங்க மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு மம்தா ஒத்துழைப்பு வழங்கவில்லை என தொடர்ந்து காங்கிரஸ் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Byelection, Mamata Banerjee, West Bengal Assembly Election 2021