பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்
காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநில கட்சிக்கும் நல்லுறவு இல்லை என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் என்றைக்கோ சொல்வி விட்டேன். ஆனால் அதனை காங்கிரஸ் கேட்கவில்லை.
எந்த மாநிலக் கட்சியுடனும் காங்கிரசுக்கு நல்லுறவு கிடையாது. என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் காங்கிரஸ் அதன் வழியில்தான் செல்லும். இந்தியாவின் கூட்டாட்சி முறையும், அரசியலமைப்பு சட்டமும் மத்திய பாஜக அரசால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
உத்தரப்பிரதேச தேர்தலில் நான் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். ஏற்கனவே அக்கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்தேன். மீண்டும் மார்ச் 3ம் தேதி சமாஜ்வாதியை ஆதரித்து பிரதமம் மோடியின் வாரணாசி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.
இதையும் படிங்க -
கர்நாடக பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு!
உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக அகற்றப்பட்டால் மட்டும்தான், இந்தியாவை விட்டே பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த முடியும். உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்கள் 2024 மக்களவை தேர்தலில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க -
ஹிஜாப் அணிவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் வாதம்
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை ஏற்படுத்துவதற்கு இவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் காங்கிரஸ் தரப்பிலிருந்து உறுதியான ஆதரவு கிடைக்கவில்லை. உத்தரப்பிரதேச தேர்தலுக்கு பின்னர், இதுதொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.