இடைத்தேர்தலுக்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலுக்கு மம்தா பானர்ஜி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

 • Share this:
  நாடு முழுவதும் பரவலாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றுமுடிந்தது. அதில், மேற்கு வங்க மாநிலத் தேர்தல் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. முந்தைய தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த பாஜக, இந்த முறை மம்தா பானர்ஜிக்கு கடும் குடைச்சலைக் கொடுத்தது.

  கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18-ல் வெற்றி பெற்ற தெம்புடன் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக பிரமாதமாக களம் இறங்கியது. போதாக்குறைக்கு திரிணாமுல் காங்கிரஸின் ஹெவி வெயிட் தலைவரும், மம்தாவுக்கு வலதுகரமாக திகழ்ந்தவருமான முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு பக்கபலமாக மாறினார். மம்தா பானர்ஜிக்கு தைரியம் இருந்தால் நந்தி கிராம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட முடியுமா என்று சுவேந்து அதிகாரி சவால் விட்டார்.

  அவருடைய சவாலை ஏற்று நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்டார் மம்தா பானர்ஜி. மாநில அளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. ஆனால், நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எம்.எல்.ஏவாக இல்லாத நிலையிலும் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுகொண்டார்.

  ஆனால் முதல்வராக பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏவாக தேர்வு பெற்றால்தான் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும். நவம்பர் மாதத்துக்குள் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அவர் முதல்வராக நீடிக்க முடியாது. இந்தநிலையில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்று சுமார் 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  செப்டம்பர் 30-ம் தேதி மேற்குவங்கத்தின் பபானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், இன்று பபானிபூரில் மம்தா பானர்ஜி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
  Published by:Karthick S
  First published: