அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் சதி உள்ளது: ரயில்வேதுறை அலட்சியமாக இருந்துள்ளது - மம்தா பானர்ஜி கடும் தாக்கு

அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் சதி உள்ளது: ரயில்வேதுறை அலட்சியமாக இருந்துள்ளது - மம்தா பானர்ஜி கடும் தாக்கு

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் பெரிய சதி உள்ளது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து, பா.ஜ.கவுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையில் தீவிர போட்டி நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று பலர் பா.ஜ.கவுக்கு சென்றுள்ளனர். இந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தநிலையில், நேற்று மேற்கு வங்கமாநில தொழிலாளர் துறை அமைச்சர் ஜாகிர் ஹூசைன் முர்ஷிதாபாத்திலுள்ள நிமிட்டா ரயில்நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளனர். அமைச்சருக்கும் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமைச்சர் ஹூசைன், தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார். அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு இன்று காலையில் முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார். அங்கு மருத்துவர்களிடம் உசேனின் உடல்நலம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி விசாரித்தார்.

  அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘ஜாகிர் ஹூசனை தங்களது கட்சியில் சேரச் சொல்லி சமீப காலமாக ஒரு தரப்பு வற்புறுத்திவந்தது. விசாரணை முடிவதற்கு முன்பு நான் எதையும் வெளியிடுவதற்கு தயாராக இல்லை. இந்த தாக்குதல் திட்டமிட்ட சதியாக இருந்துள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல். ரயில்நிலையத்தில் இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெற்றது. ரயில்வே துறை இத்தனை அலட்சியாக இருந்துள்ளது. அவர்கள், உரிய பாதுகாப்பு செய்யவில்லை. இதுதொடர்பாக மாநில சி.ஐ.டி விசாரணை நடத்தும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: