உதவி கேட்டு மம்தா பானர்ஜி பேசியதாக பாஜக பிரமுகர் வெளியிட்ட ஆடியோ! - மேற்குவங்கத்தில் பரபரப்பு!

மம்தா பானர்ஜி

நந்திகிராமில் தனக்காக வேலை செய்யுமாறு மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிடம் பேசியதாக பாஜக பிரமுகர் வெளியிட்டுள்ள ஆடியோ மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Share this:
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியிருக்கும் நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸுக்காக தேர்தல் வேலை பார்க்குமாறு கூறியதாக பாஜக தலைவர் ஒருவர் வெளியிட்டிருக்கும் ஆடியோ அரசியல் அரங்கை அதிரச் செய்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடல் செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

மேற்குவங்க தேர்தலில் உச்சகட்ட மோதல் நடைபெறும் தொகுதியாக இருப்பது புர்பா மெதின்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம். இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜக சார்பில் முன்னாள் அமைச்சரும், ஒரு காலத்தில் மம்தாவுக்கு நெருக்கமாக திகழ்ந்தவருமான சுவேந்து அதிகாரியும் மோதுகின்றனர். இருவருக்கும் வாழ்வா? சாவா? என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தது நந்திகிராம் போராட்டம் தான். ஆனால் அங்கு சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினர் செல்வாக்குடன் திகழ்ந்து வருகின்றனர். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை வீழ்த்துவேன் என்று சுவேந்து அதிகாரி சவால் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நந்திகிராம் தொகுதியின் பாஜக துணைத் தலைவர் பிரனாய் லால் என்பவருக்கு முதல்வர் மம்தா தொலைபேசியில் அழைத்து தேர்தலில் தனக்காக வேலை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக பாஜக தலைவர் அமித் மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்காள மொழியில் இருவரும் பேசும் அந்த ஆடியோ உள்ளது.மம்தா பேசியதாக ஆடியோ வெளியிட்டிருக்கும் பிரனாய் லால் கூறுகையில், “நான் திரிணாமுல் காங்கிரஸுக்கு மீண்டும் வர வேண்டும், தனக்காக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று மம்தா கூறினார், ஆனால் நான் மறுப்பு தெரிவித்தேன். நீண்ட காலமாகவே சுவேந்து அதிகாரியுடன் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். நந்திகிராமில் சிபிஎம் கட்சி அட்டகாசம் செய்த போது அதில் இருந்து விடுபட உதவியது சுவேந்து அதிகாரியின் குடும்பம் தான், அவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். தற்போது பாஜகவில் இருக்கிறேன். சுவேந்து அதிகாரியை வெற்றி பெற வைப்பேன்.

திரிணாமுல் காங்கிரஸ் நந்திகிராமில் வசிப்போருக்கு எதுவும் செய்ததில்லை என்று மம்தாவிடம் கூறியதாக தெரிவித்தார்.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது தொடர்பாக மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Published by:Arun
First published: