கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பெண் குழந்தைகள் கல்வி செயற்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாயி தனது ட்விட்டர் பக்கத்தில், இஸ்லாமிய பெண்களை ஓரங்கட்டுவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் புதிய பிரச்னை உருவானது. அங்குள்ள அரசு PUC கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் தலையில் முக்காடாக அணியும் ஹிஜாபை வழக்கம்போல் அணிந்து வந்தபோது வகுப்பில் அமரக் கூடாது என நிர்வாகம் கூறியது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர்களில் ஒருசிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நேற்று மாண்டியாவில் உள்ள PES கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது தொடர்பான வழக்கின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு மீண்ட பெண் கல்வி செயற்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாயி இந்த விவகாரம் தொடர்பாக ட்விட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: Hijab row: ஹிஜாப் விவகாரம் காரணமாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
அதில், ‘பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது. குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உடை அணிவதாக கூறி பெண்களைபுறக்கணிப்பு தொடர்கிறது. இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்’ என்று மலாலா தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.