இந்திய மருத்துவ மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளின் கூட்டமைப்பு(FMRAI) உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கும் போது, டோலோ-650 என்ற காய்ச்சலுக்குக் கொடுக்கும் பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு இலவசங்களை ரூ.1000 கோடி வரை அந்த நிறுவனம் அள்ளி விட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை அளித்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமை அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த அதிர்ச்சித் தகவலை இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி சந்திரசூட், “இது என் காதுகளுக்கு வரும் இசையல்ல, எனக்கு கோவிட் வந்த போதும் இதே மருந்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தனர். இது மிகவும் சீரியசான விவகாரம்.
இதனையடுத்து மத்திய அரசு 10 நாட்களுக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தங்கள் மருந்துகளை டாக்டர்கள் நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு மருத்துவ நிறுவனங்கள் இலவசங்களை வழங்குகின்றன, இது தவிர பலவிதமான கையூட்டுப் பழக்க வழக்கங்கள் இந்தத் துறையில் புரையோடிப்போயுள்ளதாக பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கைத் தொடர்ந்ததே இந்திய மருத்துவ மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் கூட்டமைப்புதான். மருந்துகளை மார்க்கெட்டிங் செய்வதில் சீரான ஒரு தன்மை வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும் என்று கோரியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சல் அதன் உச்சத்தில் இருந்த கட்டத்தில் ரெம்டிசிவிர் என்ற ஊசி மருந்தை இப்படித்தான் விற்றனர், என்று இவர்கள் மருத்துவர்களின் அறமற்ற போக்குகளை உதாரணமாகக் காட்டினர்.
அபர்னா பட் என்ற வழக்கறிஞர் மூலம் இந்த பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது, இதில் ஆரோக்கியம் என்பது உரிமை, வாழ்வுக்கான உரிமையின் கீழ் இது வருகிறது. இதற்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நீதிசார்ந்த, அறம் சார்ந்த விற்பனை நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
இந்தத் துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, குறிப்பாக மருத்துவர்களின் பிராக்டீஸ் மற்றும் மருத்துவர்கள் மருந்து பரிந்துரைக்கும் விதம் ஆகியவை ஊழல் மலிந்தவை என்று இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு தங்கள் மருந்துகளை பிரிஸ்கைரப் செய்ய பரிசுப்பொருட்கள் தவிர இத்யாதிகளை வழங்கி சலுகை கொடுக்கின்றன, இதனால் மருத்துவர்கள் 2 மாத்திரை போதும் என்ற இடத்தில் 10 மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர், இதனால் நோயாளியின் உடல் பாதிக்கப்படுகிறது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட முடியும் ஆனால் அவர்கள் அனைத்திற்கும் போக்குக் காட்டி இப்படியாக மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுத்து வருகின்றனர். ஆகவே மத்திய அரசு இதற்கான சட்டமியற்றி வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து மீறும் மருத்துவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இந்த மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
அரசு இதற்கான சட்டத்தை உருவாக்கும் வரை உச்ச நீதிமன்றமே வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று இந்த பொதுநல மனு வேண்டிக்கேட்டுக் கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Medicine, Supreme court