மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் தனது வாதங்களை எழுப்பியுள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா. மத்திய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் மஹுவா, நேற்று நாடாளுமன்ற உரையில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயைக் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
”விவசாயிகள், மாணவர்கள், ஷாஹீன் பாக் போராட்டத்தில் கலந்துகொண்ட வயதான பெண்கள் உட்பட எதிர்ப்பவர்கள் எல்லாரையும் கோழைகள் எனவும் தீவிரவாதிகள் எனவும் அடையாளப்படுத்துகிறார்கள். இதுதான் இந்த அரசின் வீரமா?இந்திய மக்கள் படுகின்ற துன்பங்களுக்கு காரணம்,அரசு அதனை கைவிட்டதால் மட்டும் அல்ல. ஜனநாயகத்தின் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும்தான் அதனை கைவிட்டுவிட்டது. புனிதமாக கருதப்படும் நீதித்துறை இனி புனிதமாக இருக்க முடியாது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் எப்போது இந்த நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்துகொண்டு, தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரித்துக் கொண்டாரோ, அதில் குற்றம் செய்யாதவராக தன்னை அறிவித்துக் கொண்டாரோ, பணி ஓய்வு பெற்ற மூன்றே மாதங்களில் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டாரோ அப்போதே அதன் புனிதம் சிதைந்துவிட்டது” என்று பேசியுள்ளார்.
அரசின் செயல்பாடுகளை கேள்வி கேட்டதற்காக, அரசு விவகாரங்களில் கருத்து தெரிவித்ததற்காக காவல்துறையின் துன்புறுத்தலை மக்கள் எதிர்கொள்கிறார்கள். கோழைகள் அதிகாரத்தின் பொய்யான துணிச்சலுக்குப் பின்னாலும், வெறுப்பின் பின்னாலும், மதவெறியின் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். இதனை அவர்கள் தைரியம் என்கிறார்கள்” என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
விவசாயச் சட்டங்களுக்கு எதிராக 90 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராடிவருகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அரசு யாரையும் நியமிக்கவில்லை. அந்த வேளாண் சட்டங்களை இந்த அரசின் கூட்டணி கட்சிகள் கூட எதிர்த்திருக்கின்றன. மத்திய அரசு அறத்தைவிட மிருகத்தனத்தையே நம்புகிறது என்பதை இது உணர்த்துகிறது” என்றார்.
மஹுவா மொய்த்ராவவின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மற்றும் பா.ஜ.க எம்.பி நிஷிகண்ட் துபே எதிர்ப்பு தெரிவித்தார்கள். முன்னாள் தலைமை நீதிபதி குறித்துப் பேசக் கூடாது என கண்டனம் தெரிவித்தனர். தலைமை நீதிபதி குறித்த விஷயங்களைப் பேசாமல் பிற விஷயங்களைப் பேச மஹுவா மொய்த்ரா அனுமதிக்கப்பட்டார். பேச்சைத் தொடர்ந்த மஹுவா, பட்ஜெட்டுக்கு பிறகு உயர்வை பெற்றது Share Market- தான். அதாவது உயர்வை சந்தித்தது 6 கோடி பேர் மட்டுமே. 110 கோடி மக்களில் 4.6 சதவிகிதம் மட்டுமே வரி செலுத்தும் இந்த நாட்டில் எத்தனை பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பார்கள்? பங்குச்சந்தை உயர்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துவிடுவார்களா?சூழலியல் ஆர்வலர் க்ரேட்டா தன்பெர்க்கும், ஓர் அமெரிக்க பாப் நட்சத்திரத்தின் சமூக ஊடக பதிவுகளுக்கு பதிலளிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ கட்டமைப்பை பயன்படுத்தியதில் இந்த அரசின் வீரம் காட்டப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.