முகப்பு /செய்தி /இந்தியா / அக்னிபத் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ஆனந்த் மகேந்திரா உறுதி

அக்னிபத் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ஆனந்த் மகேந்திரா உறுதி

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

அக்னிபத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற திறமையான இளைஞர்களுக்கு மஹிந்திரா குழுமத்தில் வேலை உறுதி என அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஒழுக்கம் மற்றும் திறன் பயிற்சி பெறும் வீரர்கள் வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தலைமைப் பண்பு, குழுப்பணி மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றுடன், அக்னிவீரர்கள் தொழில்துறையில் சந்தைக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக விமான போக்குவரத்துத் துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.

மேலும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதேபோல பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள 10% பணியிடங்கள் அக்னிபாத் வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள்  நாட்டின் சில பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை கொளுத்துவது, ரயில்களை கொளுத்துவது என வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசம் மாநிலம் ஜூன்பூர் பகுதியில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்து, பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

மேலும் வாட்ஸ் ஆப் செயலியில் அக்னி பாதை குறித்து தவறாக வதந்தி பரப்பி வன்முறையை தூண்டிய 35 வாட்ஸ் ஆப் குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் ரயில் நிலையத்தில் கடைகளை உடைத்து அங்கிருந்த உணவு பொருட்களை திருடிச் செல்லும் வீடியோக்களும் , கொழுந்து விட்டு எறியும் ரயில்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாட்டின் பொதுச்சொத்தை இவ்விதம் எரிப்பது நியாயமா என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த காங்கிரஸ்கட்சி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Agnipath, Anand Mahindra