முகப்பு /செய்தி /இந்தியா / மகாத்மா காந்தி நினைவு தினம்: நேர்மை, கண்ணியம், அகிம்சை ஆகியவற்றின் நித்திய உருவம் தேசத்தந்தை காந்தியடிகள்

மகாத்மா காந்தி நினைவு தினம்: நேர்மை, கண்ணியம், அகிம்சை ஆகியவற்றின் நித்திய உருவம் தேசத்தந்தை காந்தியடிகள்

காந்தி

காந்தி

தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் எதுவுமில்லை என்பது மகாத்மா காந்தியடிகளின் மிகச்சிறந்த பொன்மொழிகளில் ஒன்றாக இருந்தது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மோகன்தாஸ் காந்தியின் 16-வது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார். தனது 19-வது வயதில், கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணம் செய்தார் காந்தி. காந்தி முதன்முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, அவருக்கு வயது 20. பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது. இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து, இந்தியா திரும்பினார்.

பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார். 1893-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்பட்டார் காந்தி. ரயில் பயணத்தின்போது, நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, நாட்டல் பகுதியில் இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார். தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதியின் உச்ச நீதிமன்றத்தில் பதிவுசெய்த முதல் இந்திய வழக்கறிஞர் காந்தி தான். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் வாழ்விடங்கள், வர்த்தகம் ஆகியவற்றை மறுக்கும் சட்டங்களை எதிர்த்து, தொடர்ந்து தாதாபாய் நவ்ரோஜிக்குக் கடிதம் எழுதினார்.

1902-ம் ஆண்டு, மீண்டும் இந்தியா திரும்பிய காந்தி சில நாட்கள் கல்கத்தாவில் (கொல்கத்தா) கோகலேவுடன் தங்கினார். பிறகு, பம்பாய்(மும்பை) நீதிமன்றத்தில் வழக்காடுவதைத் தொடங்கினார். எனினும், தென்னாப்பிரிக்காவில் அவர் தொடங்கிய பணி அவரை மீண்டும் அழைத்தது. 1918-ம் ஆண்டு, முதல் உலகப் போருக்காக ராணுவ வீரர்களைத் திரட்டினார். வைஸ்ராய் நடத்திய மாநாட்டில், இந்துஸ்தானி மொழியில் தனது உரையைப் பதிவு செய்தார் காந்தி. 1919-ம் ஆண்டு, ரௌலட் சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டத்தைத் தொடங்கினார். 1921-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் பயணித்து காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கவும், திலக் விடுதலை நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி பெறுவதற்கும், நாடு முழுவதும் 20 லட்சம் ராட்டைகள் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.

1930-ம் ஆண்டு உப்பு மீது வரி விதிக்கப்படுகிறது. அதனை கண்டித்து, வரியை நீக்க கோரி, வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதியதோடு, எச்சரிக்கை விடுத்தார் காந்தி. மார்ச் 12, 1930 அன்று, குஜராத் அகமதாபாத்திலிருந்து, தண்டி வரை 78 சத்தியாகிரகிகளுடன் நடைபயணம் மேற்கொண்டு ஏப்ரல் 6 அன்று, பொதுமக்களுக்கு உப்பு விநியோகித்துப் போராட்டம் நடத்தினார். 1934-ம் ஆண்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், கிராம முன்னேற்றம், தாழ்த்தப்பட்டவர்கள் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்தார்.

ஆகஸ்ட் 14, 1947 அன்று, பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் பெறுவது மகிழ்ச்சி என்றபோதிலும், பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது சோகமளிக்கிறது எனக் கூறினார். அதே நாளில், பாகிஸ்தான் தனி நாடாக உருவானது. ஆகஸ்ட் 15, 1947 அன்று, கல்கத்தாவில் நிலவிய மத ஒற்றுமையைக் கண்ட காந்தி, மகிழ்ந்து அதனை மிகப்பெரிய அதிசயம் என வர்ணித்தார். ஜனவரி 30, 1948 அன்று, மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நாதுராம் கோட்சே கையில் இருந்த துப்பாக்கியில் வெடித்த மூன்று தோட்டாக்கள் காந்தி உடலில் பாய்ந்தன.

'ஹே ராம்!' என்ற முழக்கத்தோடு, சரிந்து விழுந்து இறந்தார். பிப்ரவரி 12, 1948 அன்று, காந்தியின் உடல் யமுனை நதிக்கரையோரத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது சாம்பல் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது. அகா கானின் அரண்மனையில் இன்றும் காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது கொள்கைகள் உலகளவில் பின்பற்றப்பட்டு, 'சரியான வழியில் வாழ்வது' ('living the right way’) என்ற பாடப்புத்தகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற காந்திஜியின் 75 வது நினைவு தினத்தில் நாம் மனதார அவருக்கு மரியாதை செலுத்துவோம்.

எப்போதும் புத்துணர்ச்சியை தரும் மகாத்மா காந்தியின் சிறந்த பொன்மொழிகள் :

- ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய இந்த உலகம் போதுமானது, ஆனால் ஒவ்வொரு மனிதனின் பேராசைக்கும் அல்ல.

- உங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதே.

- மனிதகுலத்தின் மகத்துவம் மனிதனாக இருப்பதில் அல்ல, மனிதாபிமானத்துடன் இருப்பதில் உள்ளது.

- பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னிப்பு என்பது வலிமையானவர்களின் பண்பு.

- உடல் திறனில் இருந்து வலிமை வருவதில்லை அது அழியாத விருப்பத்திலிருந்து வருகிறது.

- மகிமை என்பது ஒருவரின் இலக்கை அடைவதற்கான முயற்சியில் உள்ளது, ஆனால் அதை அடைவதில் அல்ல.

- மனதில் தீயவற்றை சிந்திப்பவன், தீய செயல்களை செய்பவன் போன்றவனே. சிந்தப்பவனை விட செய்பவன் மோசமானவன் அல்ல.

- தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் எதுவுமில்லை.

- இந்த உலகத்துக்கு அமைதியை போதிக்க விரும்பினாலும் உண்மையான போருக்கு எதிரான போரை தொடங்க வேண்டும் என்றாலும் அதைக் குழந்தைகளிடம் இருந்து தான் தொடங்க வேண்டும்.

- எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை. அந்த அறத்துக்கே உண்மை தான் அடிப்படை.

- வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் மட்டும் கொல்லப்படுவதில்லை. அவர்கள் மேற்கொண்ட கொள்கையால் தான் கொல்லப்படுகின்றனர்.

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. தனது தனித்துவத்தால் மக்களை ஈர்த்த காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தினத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக தியாகிகள் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி இந்திய தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் சத்தியாகிரகம் என்ற அறவழிப் போராட்டத்தை நடத்தி மக்கள் மனதில் நீங்கா புகழ் கொண்ட தலைவராக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மகாத்மா.

First published:

Tags: Gandhi, Mahatma Gandhi, Mohandas Karamchand Gandhi