Home /News /national /

பால்தாக்ரே பெயரை பயன்படுத்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை: சிவசேனா செயற்குழுவில் தீர்மானம்

பால்தாக்ரே பெயரை பயன்படுத்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை: சிவசேனா செயற்குழுவில் தீர்மானம்

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

சிவசேனாவில் உத்தவ் தாக்ரேவுக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக அக்கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் பெயரையும் பால் தாக்ரேவின் பெயரையும் அதிருப்தி எம்எல்ஏக்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணிக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  மகாவிகாஸ் அகாதி கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் அவர்கள், தற்போது அசாம் மாநிலத்தில் தங்கியுள்ளனர். கவுஹாத்தியில் ஷிண்டே தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனா பாலசாஹிப் என அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற சிவசேனா செயற்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்கள் விருப்பப்படி நடந்துக் கொள்ளலாம்  என்றும், அவர்கள் விவகாரத்தில் தான் தலையிடப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உத்தவ் தாக்ரேவுக்கு மட்டுமே உள்ளது.  கட்சியின் பெயரையோ, அதன் நிறுவனர் பால் தாக்ரேவின் பெயரையோ அதிருப்தியாளர்கள் பயன்படுத்தக் கூடாது,  அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீசை, மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் பிறப்பித்துள்ளார்.  இரண்டு நாட்களுக்கு முன்னர் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.  16 எம்.எல்.ஏக்களும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு - சிவசேனா தொண்டர்கள் ஆவேசத்தால் அச்சம்
இதனிடையே அதிருப்தி எம்எல்ஏக்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் புனேவில் கத்ரஜ் பகுதியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ தானாஜி சாவந்தின் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

உத்தவ் தாக்கரேவிற்கு தொந்தரவு தரும் எம்.எல்.ஏக்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி வரை அரசியல் கூட்டங்கள், பேரணிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Maharashtra, Shiv Sena

அடுத்த செய்தி