Home /News /national /

சிக்கலில் சிவசேனா.. மகாராஷ்டிராவில் என்ன தான் நடக்கிறது - முழு விவரம்

சிக்கலில் சிவசேனா.. மகாராஷ்டிராவில் என்ன தான் நடக்கிறது - முழு விவரம்

சிவசேனா

சிவசேனா

கட்சி நிர்வாகிகள் இடையே பேசிய உத்தவ் தாக்கரே சிவசேனாவை பாஜக உடைக்க பார்க்கிறது . உண்மையான சிவசேனாக்கள் என் தலைமை மீது விருப்பம் கொள்ளாவிட்டால் நான் அதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

மராட்டியம் மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டது சிவசேனா. கட்சிக்குள் இருந்தே எழுந்த எதிர்ப்பு குரலால் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. சிவசேனா அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாதி கூட்டணியும் முறியும் நிலையில் உள்ளது. என்னதான் நடக்கிறது மராட்டிய அரசியலில் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பாக சிவசேனாவின் வரலாறு, பாஜக-சிவசேன கூட்டணியை அறிந்து கொள்ள வேண்டும்.

சிவசேனா தொடங்கப்பட்டதன் பின்னணி

1950-களின் இறுதியில் குஜராத் பகுதிகள், மராட்டிய பகுதிகளால் இணைந்த மும்பை மராத்தி, குஜராத்தி மொழி பேசுபவர்களால் ஆளப்பட்டு வந்தாலும், செல்வந்தர்களான குஜராத்திகளே ஆதிக்கம் செலுத்திவந்தனர். அப்போதுதான் தங்களுக்கு என்று தனி மாநிலம் தேவை என மராத்தியர்கள் குரல் எழுப்பினர். அவர்களின் குரலாய் ஒலித்து சம்யுக்தா மகாராஷ்டிர சமிதி இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர்தான் பால் தாக்கரேவின் தந்தை கேஷவ் சீத்தாராம் தாக்கரே.

பாலாசாஹேப் என்ற பால் தாக்கரே ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையாளராக தன் வாழ்வை தொடங்கியவர். கேலிச்சித்திரங்களை வரைவதில் வல்லவரான பால் தாக்கரே 1960ல் மார்மிக் என்ற இதழை 4 பேருடன் இணைந்து தொடங்கினார். 1960-களின் தொடக்கத்தில் மராட்டியத்தில் வணிகத்தில் குஜராத்திகளும், அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் மதராஸாக்களும்(தமிழர்கள்) ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலம்.

மராட்டியத்தில் மராட்டியர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் 1966ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சிவாஜி பூங்காவில் தொடங்கப்பட்ட இயக்கம்தான் சிவசேனா. அதை நிறுவியர் பால் தாக்கரே.
மேலும் படிக்க: ஒரு நாள் உணவுக்கு மட்டும் ரூ.1 லட்சம்.. சிவசேன அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் சொகுசு வாழ்க்கை
சிவசேனா என்றாலே இந்துத்துவா, இனவாதம், வன்முறை என்பதே அடையாளமாக இருந்தது. இந்துத்துவா கொள்கைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது நேரடியாக வெறுப்பு அரசியலையும், வெறுப்பு பேச்சையும் உமிழ்ந்த பால் தாக்கரே மராட்டியர்களின் உரிமையை கட்டமைத்தவர் என்பதற்காக மகத்தான தலைவராக பார்க்கப்பட்டார். "இந்துக்களுக்கு என்று தற்கொலைப் படை தேவை" என்று பேசியுள்ளதன் மூலம் பால் தாக்கரேவின் இந்துத்துவா கொள்கையை நாம் அறியமுடிகிறது.

இந்துத்துவா கொள்கையில் சிறிதளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். பிற்காலத்தில் அரசியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்து மாநிலத்திலும், மத்தியிலும் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக சிவசேனா உருவெடுத்தது .

முதன்முறையாக கூட்டணி

1980 களின் பிற்பகுதியில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பயணிக்க ஆரம்பித்தது பாஜக. 1984ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 4 தொகுதிகளிலும், தாமரை சின்னத்தில் போட்டியிட்ட சிவசேனா 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் அந்த தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு சிவசேனாவை குற்றம்சாட்டியது பாஜக.தொடர்ந்து 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் பாஜக 52, சிவசேனா 42ல் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியாக பாஜக இருந்தது. இதனையடுத்து 1995ல் நடந்த சட்டமன்றதேர்தலில் சிவசேனா 73, பாஜக 65 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. கூட்டணி ஒப்பந்தத்தின் படி சிவசேனாவின் மனோகர் ஜோஷி முதலமைச்சராக பதவியேற்றார். 1999ல் நடந்த தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது. 65 இடங்களில்வென்ற சிவசேனா எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது.

தொடர்ந்து 2004ல் சிவசேனா எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவே, 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா 44, பாஜக 45 இடங்களில் வென்றது. அப்போது பாஜக எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட சிவசேனா - பாஜக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் மட்டும் தனித்து களம் கண்டன. அப்போது பாஜக 123, சிவசேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின் பாஜகவுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற்றது சிவசேனா. முதல்முறையாக தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது.

பாஜக-சிவசேனா கூட்டணியில் விரிசல்

ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிறு, சிறு உரசல்களுடன், சலசலப்புடன் தொடர்ந்த பாஜக- சிவசேனா கூட்டணி 2019 தேர்தல் மூலம் பிரிந்தது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு 2019ல் நடந்த தேர்தலில் பாஜக 106 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், எதிர் கூட்டணியில் போட்டியிட்ட சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க: 12-எம்.எல்.ஏக்களை பதவிநீக்கம் செய்யுங்கள்.. சிவசேனா கோரிக்கை - உச்சக்கட்ட பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்

பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்களை பாஜக-சிவசேனா கூட்டணி பெற்றது. ஆனாலும் ஆட்சியமைக்க சிவசேனா நிபந்தனைகளை விதித்தது. வாக்குறுதியின்படி ஆட்சியில் சிவசேனா பங்கு கேட்டதால் இந்துத்துவா கொள்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் போல இருந்த சிவசேனாவும், பாஜகவும் முதலமைச்சர் நாற்காலிக்காக கூட்டணியை முறித்துக்கொண்டன.

பாஜக சிவசேனா கூட்டணி முறிந்ததால் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் போனது. பிறகு அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் கோஷ்யாரி.  பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க பாஜக மறுத்தது. அடுத்த பெரிய கட்சியாக இருந்த சிவசேனாவுக்கும் அதை தொடர்ந்து தேசியவாத காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சிவசேனா, காங். தேசியவாத காங். ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்த அதேவேளையில் மறுபுறம் ஆளுநர் பரிந்துரையின்பேரில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அந்தநேரம் தேசியவாத காங்கிரஸில் போர்க்கொடி தூக்கிய சரத்பவாரின் உறவினரான அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார். தேவேந்திர பட்னவிஸும், அஜித் பவாரும் ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதனடிப்படையில் குடியரசு தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. அஜித் பவார் ஆதரவுடன் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. முதல்வராக தேவேந்திர பட்னவிஸும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால் தேசியவாத காங். எம்எல்ஏக்கள் பெரும்பான்மையோர் தங்களுடன் இருப்பதாக கூறி சரத் பவார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிவசேனாவும், காங்கிரசும் தங்கள் பங்கிற்கு வழக்கு தொடர்ந்தன. 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க தேவேந்திர பட்னவிஸ்க்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அன்றிரவே தேவேந்திர பட்னவிஸும், அஜித் பவாரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.

முதல்வராக தாக்கரே பொறுப்பேற்பு

பட்னவிஸ் ராஜிநாமாவை தொடர்ந்து மராட்டிய அரசியலில் ஆச்சர்யங்கள் நிகழ்ந்தன. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்ற வாசகத்தை மெய்பிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது. சிவசேனா- தேசியவாத காங்., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து பாஜகவுக்கு அதிர்ச்சி தந்தது. மகா விகாஸ் அகாதிக்கு சுயேட்சைகளும் இன்ன பிற கட்சிகளும் ஆதரவு அளித்தன. கொள்கையில் ஒத்துபோகாத சிவசேனா ஆட்சியமைக்க தார்மீக ஆதரவு தந்து கை கொடுத்தது காங்கிரசும் தேசியவாத காங்கிரசும். முதலமைச்சராக பொறுப்பேற்ற சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, அமைச்சரவையை காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் பகிர்ந்தளித்து முதலமைச்சர் நாற்காலியை தக்கவைத்தார். எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மூன்றாடுகளை நிறைவு செய்யும் நிலையில் தற்போது உத்தவ் தாக்கரேவின் முதல்வர் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. உத்தவ் தாக்கரேவை ஆட்டம் காணச்செய்தது கூட்டணியில் உள்ள காங்கிரசோ, தேசியவாத காங்கிரசோ இல்லை. உத்தவ் தாக்கரே தலைமை தாங்கும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேதான்.

ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி

மகாராஷ்டிர மாநிலத்தையே தனது அரசியல் நடவடிக்கைளாலும், பேச்சாலும் அதிரவைத்தவர் பால்தாக்கரே. தற்போது அவருடைய மகனான உத்தவ் தாக்கரேவை தனது அரசியல் நிலைப்பாட்டால் ஆட்டம் காண செய்திருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே, மராத்தா சமூகத்தை சேர்ந்தவரான ஏக்நாத் ஷிண்டே பால்தாக்கரேவின் ஈர்ப்பால் அரசியலுக்கு வந்தவர். தனது கொள்கையாலும், கட்சி பணியாலும் கவனம் பெற்ற ஷிண்டேவுக்கு 1997ல் தானே மாநகராட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கி அழகு பார்த்தார் பால்தாக்கரே. அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று பின்பு 2001ல் தானே மாநகராட்சியின் தலைவராக தேர்வானார் அதற்குபிறகு ஏறுமுகம் கண்ட ஷிண்டே சிவசேனாவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தை பிடித்து தவிர்க்க முடியாத தலைவரானார். முதன்முறையாக 2004ல் சட்டமன்ற தேர்தலில் வென்றது முதல் தற்போது வரை தொடர்ந்து 4 முறை மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ளார். சிவசேனாவில் நீண்ட அனுபவம் வாய்ந்த ஷிண்டே தற்போது அரசுக்கு ஆபத்தாக அமைந்துள்ளார்

அசாமில் எம்எல்ஏக்கள் முகாம்

2019 தேர்தலுக்கு பின் சிவசேனா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டேதான் தற்போது சுயேட்சை மற்றும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் என 50 பேருடன் அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் முகாமிட்டுள்ளார். . இதனால் சிவசேனா சட்டமன்ற கட்சி தலைவர் பதவியிலிருந்து ஷிண்டேவை நீக்கிவிட்டு அஜய் சவுத்ரியை நியமித்தது கட்சி தலைமை. அதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த ஷிண்டே நாங்கள் பாலாசாஹேப்பின் உண்மையான சிவசேனாக்கள். அவருடைய இந்துத்துவா கொள்கையை பின்பற்றுபவர்கள், பதவிக்காக அவருடைய கொள்கையை நாங்கள் உதாசீனப்படுத்தமாட்டேம் என பதிவு செய்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் அசாதாரண சூழல் நிலவிய நிலையில் மேற்பார்வையாளராக கமல் நாத்தை அனுப்பிவைத்து அவசர ஆலோசனை நடத்தி உத்தவ் தாக்கரேவுக்கு தனது ஆதரவை தெரிவித்தது காங்கிரஸ். தேசியவாத காங்கிரசும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவை தெரிவித்து ஆறுதல் அளித்தது. இதனையடுத்து பேஸ்புக் மூலம் உரை நிகழ்த்திய உத்தவ் தாக்கரே " என் மீது நம்பிக்கை கொண்டு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால் என்னுடன் பயணித்தவர்கள் எனக்கு எதிராக உள்ளனர்.
பால் தாக்கரேவின் கொள்கையிலிருந்து சிவசேனா ஒருபோதும் விலகவில்லை. எனக்கு அதிகாரத்தின் மீது பசியில்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் முதலமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன் என்றார். தொடர்ந்து உரை நிகழ்த்திய
அடுத்த நாளே முதலமைச்சர் இல்லத்தை காலி செய்துவிட்டு தனது சொந்த இல்லத்தில் குடியேறினார் உத்தவ் தாக்கரே.

இந்நிலையில் நாங்கள்தான் உண்மையான சிவசேனாக்கள் என அதிருப்தி எம்எல்ஏக்கள் 37 பேரின் கையொப்பமிட்ட கடிதத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகருக்கும் ஆளுநருக்கும் அனுப்பிவைத்து அரசியல் களத்தில் அனலை பற்றவைத்துள்ளார் ஷிண்டே.

சிவசேனாவை உடைக்க பார்க்கிறது பாஜக

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் இடையே பேசிய உத்தவ் தாக்கரே சிவசேனாவை பாஜக உடைக்க பார்க்கிறது . உண்மையான சிவசேனாக்கள் என் தலைமை மீது விருப்பம் கொள்ளாவிட்டால் நான் அதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார். பாஜகாவால் சிவசேனாவை வேண்டுமானால் உடைக்கலாம் ஆனால் கட்சிக்கு இருக்கும் இந்துத்துவா வாக்கு வங்கியை உடைக்க முடியாது. பாஜகவுக்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும் என்னிடம் வந்து கூறிவிட்டு செல்லுங்கள். எங்களைவிட்டு பிரிந்தவர்கள் பாஜகவுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. கட்சியை விட்டு செல்பவர்கள் செல்லலாம் ஆனால் மீண்டும் சிவசேனாவை நிறுவுவோம் என ஆவேசமாகபேசியுள்ளார்.
Published by:Murugesh M
First published:

Tags: BJP, Maharastra, Shiv Sena

அடுத்த செய்தி