அதிரவைக்கும் மகாராஷ்டிரா - சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்தது : ஒரே நாளில் 23,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

அதிரவைக்கும் மகாராஷ்டிரா

மும்பையில் மட்டும் 2,377 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,52,760 ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத உச்சமாக இன்று ஒரே நாளில் 23,000 என்ற அளவைக் கடந்துள்ளது. நேற்று 18,000 என்ற அளவில் இருந்த பாதிப்பு இன்று அதிரடியாக 23,000ஐ கடந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவின் கொரோனா தலைநகரமாக இருந்த மகாராஷ்டிரா தற்போது மீண்டும் அதே நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி முதல் வாரம் வரையில் தினசரி கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே முன்னணியில் இருந்த கேரளாவை பின்னுக்குத்தள்ளிவிட்டு மகாராஷ்டிரா அந்த இடத்தை பிடித்தது. அப்போதில் இருந்தே மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது.

சில நாட்களாகவே 15,000 என்ற அளவில் இருந்த மகாராஷ்டிராவில் நேற்று புதிய உச்சமாக 18,000 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் சாதனை அளவாக 23, 179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 84 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் முலம் அங்கு மொத்த பாதிப்பு 23,70,507 ஆகவும் பலி எண்ணிக்கை 53,080 ஆகவும் அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் 2,377 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,52,760 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவது பிற மாநில மக்களையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. ஏற்கனவே ஒராண்டாக கொரோனா தங்களின் வாழ்வாதாராத்தை விழுங்கிவிட்ட நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு தடுப்பூசி போடும் பணிகளும் சாதனை அளவை எட்டியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 2,64,897 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 31,33,612 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் கூறுகையில், மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக கூறினார்.
Published by:Arun
First published: