'10-ஆம் வகுப்பு தாண்டவில்லை'.. முழு கிராமத்தையே வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஷாலினி விலாஸ் யார்?

'10-ஆம் வகுப்பு தாண்டவில்லை'.. முழு கிராமத்தையே வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஷாலினி விலாஸ் யார்?

ஷாலினி விலாஸ்

கிராம்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிலை உருவாக்கிக்கொடுத்தல் உள்ளிட்ட தொழில்களை அமைத்து கொடுத்து வருகிறார்.

  • Share this:
மகாராஷ்டிரா மாநிலம், ராய்கர் மாவட்டத்தின் சிக்லாப் (Chiklap) கிராமத்தில் ஷாலினி விலாஷ் வசித்து வருகிறார். 45 வயதான அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். தற்போது சிக்லாப் கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். அவருடைய செயல்கள் மூலம் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். அப்படி என்ன செய்துவிட்டார் ஷாலினி விலாஸ்?

10-ஆம் வகுப்பு கூட தாண்டாத பெண்ணாண ஷாலினி விலாஷூக்கு, குடும்பத்தை பாதுகாக்க எங்கு சென்றாலும் வேலை கிடைக்கவில்லை. 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்து கொண்டு, குடும்ப பாரத்தை முழுவதையும் கணவர் மீது சுமத்த விரும்பாத அவர், கிராமப்புற பெண்களின் வாழ்வாதார உயர்வுக்காக பணியாற்றும் ஸ்வதேஷ் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சமூகபணியாற்றும் நபராக 2014-ஆம் ஆண்டு இணைத்துக்கொண்டார். குறுகிய காலத்தில் அந்த அமைப்பின் உறுப்பினராக மாறிய அவர், சட்டம், பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் குறித்து கற்றுக்கொண்டார், பின்னர், 2017 ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து சிறிய தொகை ஒன்றை லோனாக பெற்றுக்கொண்டார். அதன்மூலம் 2 எருமைகளை வாங்கி வளர்த்துள்ளார்.

தற்போது அவர்களின் கால்நடைப் பண்ணையில் 6 எருமை மாடுகள் உள்ளன. நாள்தோறும் 45 முதல் 50 லிட்டர் பாலை கறந்து விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் அவர்களது குடும்பம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானமாக பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது, தனிநபர் சேமிப்பு மூலம் குழந்தைகளின் கல்விக்கு செலவழித்து, இரண்டு மகள்களை திருமணம் செய்து கொடுத்துள்ளார், மகனை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது தேர்ந்த கல்வியாளர்போல் இருக்கும் அவர், பல்வேறு கிராமப்புற பெண்களுக்கு கல்வி, சட்டம், சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து பாடம் எடுக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

பெண்களின் வளர்ச்சி குறித்து அவர்களிடையே ஷாலினி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஷாலினி வாழும் கிராமத்தில் சாதி பாகுபாடு இருப்பதால், தனது வீட்டில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த ஒருவரை பணிக்கு அமர்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார். தன்னுடைய பணி குறித்து ஷாலினி பேசும்போது, பெண்கள் நிதி சுதந்திரம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். தன்னைப்போலவே தன் கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களும் நிதி சுதந்திரம் அடைவதற்கு தன்னால் இயன்ற சமூக சேவைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ள ஷாலினி, ஆட்டு பண்ணை வைப்பதற்கான லைசென்ஸூக்கு விண்ணப்பித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

அஷ்மிதா யோஜானா (Asmita Yojana) என்ற பெண்கள் குழு ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக ஷாலினி செயல்பட்டு வருகிறார். அந்த அமைப்பின் மூலம் கிராம்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிலை உருவாக்கிக்கொடுத்தல் உள்ளிட்ட தொழில்களை அமைத்து கொடுத்து வருகிறார். பெண்கள் சுகாதாரம் மற்றும் மாதவிடாய் குறித்தும் ஷாலினி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஸ்வதேஷ் மித்ரா அமைப்பின் நிர்வாக இயக்குநர் மக்னேஷ் வாங்கே (Mangesh Wange) பேசும்போது, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேரை வறுமை கோட்டில் இருந்து உயர்த்துவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உதவி செய்யும்போது இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published by:Gunavathy
First published: